சேலம் மாவட்டம் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. அரசு செய்த பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

சேலம் மாவட்டம் 16 தொகுதிகளில் அ.தி.மு.க. அரசு செய்த பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

வெள்ளி, ஏப்ரல் 22,2016,

சேலம் கூத்தாடிபாளையத்தில் நடந்த பிரமாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசினார். அப்போது சேலம் மாவட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு செய்த பணிகள் குறித்து பட்டியலிட்டார். இதுகுறித்து அவர் பேசியதாவது., கடந்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒரு சில பணிகளைப் பற்றி மட்டும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன். 8.6 கீ.மீ. நீள எடப்பாடி புறவழிச் சாலைக்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இது விரைந்து முடிக்கப்படும்.  சேலம் மாநகரில் 5 சாலைகள் சந்திப்பு அருகே 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் உயர்மட்ட பாலப் பணிகள்  துவங்கப்பட்டுள்ளன.  சேலம் நகரம் திருவாக் கவுண்டனூர் சந்திப்பில் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் கட்டும்  பணிகள் துவங்கப்பட்டுள்ளன.  சேலம் மாவட்டத்தில் 5 இடங்களில் ரயில்வே கடவுகளுக்குப் பதிலாக, மேம்பாலம் அமைக்கும்  பணிகள் நில எடுப்பு  முடிந்த பின் துவங்கப்படும்.

நாமக்கல்-திருச்செங்கோடு சாலை 86 கோடி ரூபாய் செலவில் நான்கு வழி தடச் சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.  நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடி என்னுமிடத்தில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.  தொழில் முனைவோருக்கு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டு இங்கு தொழிற்சாலைகள் துவங்கப்படும்.  நாமக்கல் மாவட்டம், மோகனூர் பேரூராட்சியில் 3 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் மேம்பாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.  இப்பணி 12 மாதங்களில் முடிவடையும். பொத்தனூர் பேரூராட்சிக்கு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டம் துவங்கப்பட்டுள்ளது.  12 மாதங்களில் இப்பணி முடிவடையும்.  சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம் மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் 7.29 கி.மீ. நீளத்திற்கும்; நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் கடைமடை பகுதியில் 6.33 கி.மீ. நீளத்திற்கும், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை அவர்கள் தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் நினைவுச் சின்னம் எனது அரசால் அமைக்கப்பட்டுள்ளது. சேலம் பால் பண்ணையில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் வெப்ப பதப்படுத்துதல் மூலம் பாலை பதப்படுத்தும் இயந்திரம் மற்றும் பால் பாக்கெட் நிரப்பும் இயந்திரம் ஆகியவை நிறுவப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறை, பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், தொழில் துறை, மக்கள் நல்வாழ்வு துறை  போன்ற பல துறைகள் மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.

சேலம் மாவட்டத்திலுள்ள சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), கங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி மற்றும் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய 16 தொகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில், 93 பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

* பள்ளிகளுக்கு சுமார் 517 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. 

*  எடப்பாடியிலும், குமாரபாளையத்திலும் 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

*  கடந்த 5 ஆண்டுகளில் 68 கால்நடை மருந்தகங்கள் துவங்கப்பட்டுள்ளன.
*  7 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், 7 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும்  தொடங்கப்பட்டுள்ளன.
*  13 ஆரம்ப சுகாதார நிலையங்கள்  30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. 
*  நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 
*  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்
*  51 கோடி ரூபாய் செலவில் பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையம் கட்டப்பட்டுள்ளது.
*  ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சிகள் 20 பேரூராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 13 லட்சத்து 10 ஆயிரம் மக்கள் பயனடையும் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம் 270 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.
*  ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக 18 ஆயிரத்து 885 பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
*  பேரூராட்சிகளில் 268 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
*  216 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
*  நெடுஞ்சாலைத் துறையின் வாயிலாக 2 ஆயிரத்து 898 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 531 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
*  41 பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 14 பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
*  3,014 புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 10 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுப் பணித் துறையின் வாயிலாக 42 ஏரிகள் தூர் வாரப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளன. 8 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.