ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தேவை : பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் தேவை : பிரதமருக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

செவ்வாய், ஜனவரி 10,2017,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோடியை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் கலாசார பாரம்பரியத்துடன் இணைந்த விளையாட்டாக விளங்கும் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப்படுகிறது. சங்ககாலத்தில் இருந்தே காளைகளை அடக்கும் வீரர்களிடையே இந்தப் போட்டி மிக பிரபலமாக இருந்து வந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் மிகப் பழமையானது இந்த விளையாட்டுப் போட்டி. ஜல்லிக்கட்டு மூலமாக, காளைகள் நல்ல உடல்கட்டுடன் தயாராவதால், அவற்றின் இனம் நல்ல முறையில் காக்கப்படுகின்றன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த தடை விதித்து கடந்த 2014-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தக் கோரியும், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசு அறிவிக்கையில் காட்சி விலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள காளையை அதிலிருந்து நீக்க வேண்டுமென தமிழக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருந்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தங்களிடம் அளித்த மனுவில் ஜல்லிக்கட்டுத் தடைக்கான கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2015 டிசம்பர் 22-இல் அவர் எழுதிய கடிதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த உரிய சட்ட மசோதாவையோ அல்லது விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் தகுந்த திருத்தங்களையோ நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் அல்லது சிறப்பு கூட்டத்தைக் கூட்டியோ கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அவசர சட்டம் கொண்டு வரவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது இந்தக் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் திடீரென இடைக்கால தடை விதித்தது. இதனால், இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பரில் விசாரித்த உச்ச நீதிமன்றம், தடையை நீக்க முடியாது எனக்கூறி தமிழக அரசின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் வகையில், பிரமாணப் பத்திரம் ஒன்றையும் உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு தாக்கல் செய்தது. காளைகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான திட்டத்தையும் வகுத்து அளித்தது. ஆனால், அவற்றை ஏற்காமல் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உங்களைச் சந்தித்த போதும், நான் கடந்த 19-ஆம் தேதியன்று தங்களை நேரில் சந்தித்த போதும் கோரிக்கை மனுக்களை அளித்திருந்தோம். அதில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம்.

மத்திய அரசிடம் தமிழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவதற்குத் தடையாகவுள்ள சட்டப்பூர்வ அம்சங்களை அவசர சட்டத்தின் மூலம் அகற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.