ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி

வெள்ளி, ஜனவரி 08,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உடனடி நடவடிக்கை மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். ஜல்லிக்கட்டை நடத்த தாம் தொடர்ந்து போராடி வந்துள்ளதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமர் திரு.நரேந்திரமோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில், மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றங்கள் அமைச்சகம் நேற்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்துள்ளார்.

இப்பிரச்னை தொடர்பாக, தாம் பலமுறை வலியுறுத்தியதை பிரதமர் நினைவுகூருவார் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக அதிகாரிகள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி பிரதமரிடம் தாம் அளித்த மனுவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை வலியுறுத்தியதையும் முதலமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்துவதை உறுதிசெய்யும் வகையில் தேவையானால் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்றும் கடந்த மாதம் 22ம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் முதலமைச்சர் நினைவுபடுத்தியுள்ளார்.