ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

சனி, ஜனவரி 09,2016,

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மத்திய அரசின் அறிவிக்கையையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பும் படி தலைமைச் செயலாளருக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு என்னும் வீரவிளையாட்டு தமிழகத்தில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பண்டைய பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக 2006-ம் ஆண்டு முதலே பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இறுதியாக கடந்த 7.5.2014 அன்று உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு ஒட்டுமொத்த தடைவிதித்து தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையை மறுபரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டு உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவினை தாக்கல் செய்யும்படி நான் உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக அரசால் 19.5.2014 அன்று இந்த மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்னமும் நிலுவையில் உள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உச்சநீதிமன்றம் தடைசெய்து ஆணை வழங்கியதற்கு முக்கிய காரணம், தி.மு.க. அங்கம் வகித்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு 11.7.2011 அன்று வெளியிட்ட அறிவிக்கைதான். அந்த அறிவிக்கையின்படி, காட்சி விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது. 7.8.2015 அன்று பிரதமரிடம், தமிழகம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினை நான் அளித்துள்ளேன். அதில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் நடத்த வழிவகுக்கும் வகையில் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நான் பிரதமரை கேட்டுக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதுகுறித்த மசோதா ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்யும் என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சரால் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டத்தொடரில் பேசியுள்ளனர்.

எனினும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அனுமதிக்க வகைசெய்யும் மசோதா எதுவும் தாக்கல் செய்யப்படாத சூழ்நிலையில், நான் பிரதமருக்கு இதுகுறித்து 22.12.2015 அன்று கடிதம் ஒன்றை எழுதினேன். அந்த கடிதத்தில் இந்த பிரச்சினையின் முக்கியத்துவம் கருதி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக அவசர சட்டம் ஒன்றை உடனடியாக கொண்டுவரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

தமிழகத்தில் வரும் பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தேவையான சட்டபூர்வ நடவடிக்கைகளை விரைந்து எடுத்திடவேண்டும் என பிரதமரை நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம், 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிக்கையில் காளைகள் என்பது காட்சி விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை வெளியிட்டுள்ளது. அதில் உச்சநீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள 5 உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச்சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளது.மத்திய அரசின் இந்த அறிவிக்கையின் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை.தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட இயலும் என்பதால், எதிர்வரும் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் கொண்டாட இயலும்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக, மத்திய அரசின் அறிவிப்பையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பும்படி நான் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.