டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில்,தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில்,தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், டிசம்பர் 01,2015,

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த 194 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயம், கால்கள் பாதிக்கப்பட்ட 6 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், ஆயிரத்து 217 பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் ஆகியவற்றை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கினார்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களின் மனம் குளிரும் வண்ணம் திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த 194 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் 4 கிராம் தங்க நாணயங்களை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயங்களையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார்.

கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள், பணிபுரிபவர்கள் மற்றும் சுயதொழில்புரிவோர், வீட்டிலிருந்து எளிதில் கல்வி நிலையங்களுக்கும், பணிபுரியும் இடங்களுக்கும் சென்று வர ஏதுவாக பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த கால்கள் பாதிக்கப்பட்ட 6 மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களின் சாவிகளையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார்.

மேலும்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட பட்டேல் நகரில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு 147 மடிக்கணினிகள், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு 177 மடிக்கணினிகள், புத்தா தெருவில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு 405 மடிக்கணினிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளான தண்டையார்பேட்டையில் அமைந்துள்ள முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு 413 மடிக்கணினிகள், கொருக்குப்பேட்டையில் அமைந்துள்ள சர் தியாகராய கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு 75 மடிக்கணினிகள் என மொத்தம் ஆயிரத்து 217 மடிக்கணினிகளை வழங்கும் அடையாளமாக 5 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் திருமதி பா. வளர்மதி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ். கோகுல இந்திரா, தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட பயனாளிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.