தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் ; சபாநாயகர் ப.தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றனர் ; சபாநாயகர் ப.தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

புதன்கிழமை , நவம்பர் 30, 2016,

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த வி.செந்தில் பாலாஜி, ரெங்கசாமி, ஏ.கே.போஸ் ஆகியோர் சட்டப் பேரவை உறுப்பினர்களாக (எம்எல்ஏ) நேற்று பதவியேற்றனர். அவர்களுக்கு பேரவைத் தலைவர் பி.தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தலும், திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் வி.செந்தில்பாலாஜியும், தஞ்சாவூரில் எம்.ரெங்கசாமியும், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போஸும் வென்றனர்.
பதவியேற்பு: தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று பேரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். முதலில், அரவக்குறிச்சியில் வெற்றி பெற்ற வி.செந்தில் பாலாஜி பதவியேற்றார். கடவுள் அறிய உறுதியேற்பதாக பதவியேற்பின்போது அவர் குறிப்பிட்டார். அப்போது, அமைச்சர்கள் எடப்பாடி கே.பழனிசாமி, டி.ஜெயக்குமார், தங்கமணி, கே.சி.வீரமணி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
அவரைத் தொடர்ந்து, தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எம்.ரெங்கசாமி பதவியேற்றார். மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், காமராஜ், எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ரெங்கசாமியைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து வென்ற ஏ.கே.போஸ் பதவியேற்றார். அப்போது, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, கடம்பூர் சி.ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் இருந்தனர்.
செந்தில் பாலாஜியைப் போன்றே மற்ற இரண்டு பேரும் கடவுள் அறிய உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வு, மாலை 4.46 மணிக்குத் தொடங்கி 4.56 மணிக்கு நிறைவடைந்தது.
சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்ட மூன்று பேருக்கும், அமைச்சர்கள், அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். பேரவைத் தலைவர் பி.தனபால், சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன் உள்ளிட்டோரும் அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
அதிமுகவைச் சேர்ந்த மூன்று பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, பேரவையில் அதிமுகவின் பலம் 136 -ஆக அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 132 -ஆக உள்ளது. பேரவைத் தலைவருடன் சேர்த்து அந்தக் கட்சியின் பலம் 133 ஆகும். இப்போது மூன்று பேர் சட்டப் பேரவை உறுப்பினர்களாக பதவியேற்ற நிலையில், அதிமுகவின் பலம் 136 -ஆக உயர்ந்துள்ளது.