தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் உள்பட 4 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது

சனி, நவம்பர் 19,2016,

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4 சட்டமன்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணி முதல் முடிவுகள் வெளியிடப்படும்.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இங்கு 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி, தி.மு.க. வேட் பாளர் அஞ்சுகம் பூபதி உள்பட 14 பேரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ், தி.மு.க. வேட்பாளர் சரவ ணன் உள்ளிட்ட 28 பேரும் போட்டியிடுகிறார்கள்.

புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க. வேட்பாளர் ஓம் சக்தி சேகர் உள்ளிட்ட பலர் போட்டியிடுகிறார்கள்.

4 தொகுதிகளிலும் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிப்பெறச் செய்யவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வாக்காளர் பெருமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் பிரசாரம் செய்தனர். வியாழக்கிழமை மாலை பிரசாரம் முடிவடைந்ததை தொடர்ந்து வெளியாட்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேறினர்.

இதையடுத்து, 4 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக அரவக்குறிச்சி தொகுதியில் 245 வாக்குச்சாவடிகளும், தஞ்சாவூரில் 276 வாக்குச்சாவடிகளும், திருப்பரங்குன்றத்தில் 291 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் முதல் முறையாக நுண் பார்வையாளர்கள் (மைக்ரோ அப்சர்வர்ஸ்)நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் என அரவக்குறிச்சியில் 1482 பேரும், தஞ்சாவூரில் 1807 பேரும், திருப்பரங்குன்றத்தில் 1745 பேரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

3 தொகுதிகளிலும் 812 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1593 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. 122 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 240 மின்னணு எந்திரங்களும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பதிவு முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. 625 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் தலா 39 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும். மாலை 5 மணிக்கு வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் ஓட்டுபோட அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்குப்பதிவு நிலவரத்தை பொது மக்கள் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை தமிழக தேர்தல் ஆணைய இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விரலில் வைக்கும் ‘மை’ உள்ளிட்ட தேர்தல் பொருட்கள் நேற்று காலை முதல் கொண்டு செல்லப்பட்டது. வாக்குப்பதிவு மையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் நேற்று இரவே வாக்குச்சாவடிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தனர். பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவபடையினர் மற்றும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் தொகுதி முழுவதும் சுற்றி வந்து தேர்தல் ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை வருகிற 22-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணி முதல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.