தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு ; 15 வயதுக்குட்பட்ட அனைவரும் பயனடைய தமிழக அரசு நடவடிக்கை

தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு ; 15 வயதுக்குட்பட்ட அனைவரும் பயனடைய தமிழக அரசு நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 28, 2017,

சென்னை : தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், 15 வயதுக்குட்பட்ட அனைவரும் பயனடைய வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி டாக்டர் Henk Bekedam, மத்திய சுகாதாரத்துறையின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு செயலாளர் திருமதி செளம்யா சுவாமிநாதன் ஆகியோர் நேற்று சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் Henk Bekedam, தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி முகாமுக்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்கது என குறிப்பிட்டார். ரூபெல்லா தடுப்பூசி குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழகத்தில் ஒரு கோடியே 80 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 83 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான மருந்துகள், உபகரணங்கள், மருத்துவக் குழுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.