தனித்தனியே போட்டியிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சி:பெண்கள் மத்தியில் அதிமுக விற்கு அமோக ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல்

தனித்தனியே போட்டியிட்டால் மீண்டும் அதிமுக ஆட்சி:பெண்கள் மத்தியில் அதிமுக விற்கு அமோக ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல்

வெள்ளி, பெப்ரவரி 05,2016,

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக தனித்து போட்டியிட்டால் அதிமுகவே வெற்றி பெறும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவித்துதுள்ளது.
தனித்து போட்டியிட்டால் எந்த கட்சிக்கு ஆதரவு என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிமுகவிற்கு 40.10% பேரும், திமுகவிற்கு 30.16% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. தேர்தல் ஆணையம் தனது பணிகளை கவனிக்க தயாராகிவிட்டது. வாக்காளர்களும் விரலில் மை வைக்க தயாராகி வருகின்றனர். யாருடன் யார் கூட்டணி என்பது இன்னமும் வெளிப்படையாக முடிவாகாத நிலையில் கட்சி அனுதாபிகள் தவிர நடுநிலை வாக்காளர்கள்தான் இந்த முறை ஆட்சியை தீர்மானிக்க இருக்கின்றனர்.
2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. அதே மனநிலையிலேயே தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா இருப்பதாகவே தெரிகிறது. எனவேதான் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களின் மனதில் என்னதான் இருக்கிறது என்பதை எந்த அரசியல் கட்சியினராலும் கணிக்க முடியாது. எனவேதான் மக்களின் மனநிலை என்று தினசரி ஏதாவது ஒரு கருத்துக்கணிப்புகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது பற்றியும், தனித்து போட்டியிட்டால் வெல்வது யார் என்றும் குமுதம் ரிப்போர்ட்டர் கேள்விகள் கேட்டு கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளது. அதன் முடிவுகள்..

அதிமுகவிற்கு 40.10% இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டால் மக்களின் ஆதரவு அதிமுகவிற்கே கிடைத்துள்ளது. அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று 40.10% பேர் தெரிவித்துள்ளனர்.

தேர்தலில் திமுகவிற்கு வாக்களிப்போம் என்று 30.10% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவை விட 9.94 சதவிகிதம் பின் தங்கியிருக்கிறது திமுக.

எதிர்கட்சியினரால் கூட்டணிக்கு அதிகம் எதிர்பார்க்கப்படும் தேமுதிக தனித்து போட்டியிட்டால் நாங்கள் வாக்களிப்போம் என்று 6.57% பேர் கூறியுள்ளனர். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக கூறிவருகிறது. ஆண்களை விட பெண்கள் மத்தியில் தேமுதிகவிற்கு ஆதரவு குறைந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வரும் காங்கிரஸ் கட்சிக்கு 4.37% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாமக தனித்து போட்டியிட்டால் 4.95% மக்கள் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளனர். இந்த கட்சியினரைத் தவிர மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர், தமாகா, ஆகிய கட்சிகளுக்கு 1 சதவிகிதம் முதல் 1.5 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மத்தியில் அதிமுக;
ஆண்களை விட பெண்கள் மத்தியில் அதிமுகவிற்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. 44.94 % பெண்கள் அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று கூறியுள்ளனர். பட்டப்படிப்புக்கு குறைவான கல்வித்தகுதியைக் கொண்டவர்கள், விவசாயிகள், கிராமப்பகுதிகளில் அதிமுகவிற்கு ஆதரவு அதிகரித்திருப்பதாக குமுதம் ரிப்போர்டர் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.