தமது தலைமையிலான அரசு, மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி செயல்படுத்தி வருகிறது :முதல்வர் ஜெயலலிதா பேருரை

தமது தலைமையிலான அரசு, மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி செயல்படுத்தி வருகிறது :முதல்வர் ஜெயலலிதா பேருரை

திங்கள் , பெப்ரவரி 29,2016,

கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்துப் பிரிவினரின் வாழ்விலும் வளம் சேர்க்கும் விதமாக இந்தத் திட்டங்கள் உள்ளன என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சென்னையில் உள்ள தனது தொகுதியான ராதாகிருஷ்ணன் நகரில் (ஆர்.கே.நகர்) அவர் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ரூ.180.41 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்தார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி, காவலர் குடியிருப்புகள், அரசு கலை-அறிவியல் கல்லூரி, அம்மா மருந்தகம், சுற்றுச்சூழல் பூங்கா, சமுதாய நலக் கூடம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட ரூ.193.26 கோடிக்கான பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
அப்போது, 14 பேருக்கு நிதியுதவிகள், 20 லிட்டர் சுகாதாரமான குடிநீருக்கான அட்டை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கி, விழாவில் மேலும் பேசியது:-
எண்ணற்ற நலத் திட்ட உதவிகளுடன், திட்டங்கள் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன. காசிமேடு பகுதியில் மீன்பிடி துறைமுகம் புனரமைக்கப்பட்டு, திறக்கப்பட்டுள்ளது. படகு அணையும் தளம் சீரமைப்பு, அலை தடுப்புச் சுவர், மீன் இறங்கு தளம், குளிர்சாதன வசதியுடன் மீன் ஏலக் கூடம், வலை பின்னும் கூடங்கள், சுகாதார வளாகம் போன்ற பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த கத்திவாக்கம் நெடுஞ்சாலை, காக்ரேன் பேசின் சாலை- ரயில்வே சந்திப்பு கடவுக்கு மாற்றாக மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால், கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள சுமார் 5 லட்சம் பேர் பயன் அடைவர்.
கொருக்குப்பேட்டை காரநேசன் நகரில் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகளும், தண்டையார்பேட்டையில் புதுக்கப்பட்ட மாநகராட்சி பூங்காவும் திறக்கப்பட்டுள்ளன.
ரயில் நிலையம் அருகே ரயில்வே துறைக்குச் சொந்தமான இடத்தை தமிழக அரசே பெற்று இப்போது பூங்காவை அமைத்துள்ளது.
கீழ் வடக்கு பக்ஹிங்காம் கால்வாயின் குறுக்கே நேரு நகர், எழில் நகர் ஆகியவற்றை இணைக்கும் வகையில் நடை மேம்பாலமும் திறந்துவைக்கப்பட்டுள்ளது. பவர்குப்பம் பகுதியில் சேதம் அடைந்த குடிசைப் பகுதி மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்பட்டு, புதிதாக 480 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சொந்தக் கட்டடம், புதிய கோட்டம், உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் உதவி ஆணையாளர் அலுவலகம் உள்ளிட்டவையும், புதிய பூங்காக்களும், மேம்பாலங்களும் திறக்கப்பட்டுள்ளன.
7 இடங்களில் அம்மா குடிநீர் நிலையங்கள்: சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மக்கள் பெறும் வகையில், அம்மா குடிநீர் திட்டம் ஆர்.கே.நகரில் ஒரு குடிநீர் நிலையம் உள்பட 7 குடிநீர் நிலையங்களை திறந்து வைத்துள்ளேன்.
ஆர்.கே.நகரில் கூடுதலாக இரு சிற்றுந்துகள் வழித் தடங்களைத் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் கூடுதலாக 5 பஸ்கள் இயக்கப்படும்.
நலத் திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்டு மக்கள் வாழ்வில் அனைத்து நலமும், வளமும் பெற வேண்டும் என்றார் முதல்வர்.
விழாவில், தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“வாழ்நாள் முழுவதும் ஆர்.கே.நகரை மறக்க மாட்டேன்’
ஆர்.கே. நகர் சட்டப் பேரவைத் தொகுதியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா நெகிழ்ச்சியுடன் கூறினார்.
விழாவில் அவர் பேசியது:
இந்த விழாவில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இங்கு மட்டுமல்ல; ஆர்.கே.நகர் தொகுதிக்குள் நுழைந்தவுடன் வழிநெடுகிலும் இங்கு வந்து சேரும் வரை சாலையின் இருபுறமும் தொகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும், இளைஞர்களும், குழந்தைகளும் சுட்டெரிக்கும் வெயிலில் வரவேற்க காத்திருந்ததைப் பார்க்கும் போது உள்ளம் நெகிழ்ந்தது.
இந்தத் தொகுதியை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இந்தத் தொகுதியைச் சேர்ந்த மக்களும் நெஞ்சில் நீங்காத இடம்பெற்றிருக்கிறீர்கள்.
சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுத்து முதல்வராக ஆக்கியது இந்த ஆர்.கே.நகர் தொகுதி தான் என்றார்.