தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்

செவ்வாய், டிசம்பர் 06,2016,

சென்னை : முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திங்கள்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சற்று முன்னதாக நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க சட்டசபை கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் புதிய முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். அவருக்கு தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் பதவிபிரமாணம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து 31 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.