தமிழகத்தில் இனி மின்தடை என்பதே கிடையாது:அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்

தமிழகத்தில் இனி  மின்தடை என்பதே கிடையாது:அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன்

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

கோடைக்காலத்தில் மின்வெட்டை சமாளிக்கத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்துள்ளதாகம் தமிழகத்தில் இனி  மின்தடை என்பதே கிடையாது என்றும் மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னையில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில், மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் கலந்துகொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் தொழிற்சாலைகளை தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக மரபுசார்ந்த எரிசக்தி மூலம் 18,255 மெகாவாட்டும், மரபுசாரா சக்தி மூலம் 26,806 மெகாவாட் அளவுக்கும் நிறுவுதிறனை மேம்படுத்தியுள்ளோம்.
கூடுதல் உற்பத்தி: தமிழகத்தில் காற்றாலை மூலம் 7,455 மெகவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காற்றாலை மூலம் மேலும் 4,855 மெகவாட் அதிகரிக்கும் வகையில் புதிய உள்கட்டமைப்புகான நிறுவுதிறனும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒவ்வொரு நாளும் 13,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதைச் சமாளிக்கும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 7 ஆயிரம் மெகாவாட் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின்தடை என்பதே கிடையாது.
இதேபோல், கூடங்குளத்தில் இருந்து 500 மெகாவாட்டும், அனல் மின்நிலையம் மூலம் 600 மெகாவாட்டும் பெறப்படுகிறது. இதைவிட கூடுதலாக 1,000 மெகாவாட் கிடைத்தாலும் அதை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அரசு தயாராகவே இருக்கிறது. அதனால் தொழில் முதலீட்டாளர்களுக்கு மின்சார பிரச்னையே இருக்காது.
முன்னேற்பாடு: அதேபோல், கோடைகாலத்தில் மின்வெட்டை சமாளிப்பதற்கு அதிக மின் நிறுவு திறன் ஏற்படுத்தி முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே காற்றாலை மின்சக்தியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தியிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் முதலிடத்தை பிடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் சூரிய ஒளி மின்சக்தி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. உற்பத்தியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பும் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக மரபுசாரா எரிசக்தி மின்சாரம் பற்றிய ஆய்வு அறிக்கையை அமைச்சர் வெளியிட, இந்திய தொழிற்கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் எஸ்.என்.இசன்ஹவர் பெற்றுக் கொண்டார். தொழில் துறை முதன்மைச் செயலாளர் சி.வி.சங்கர், இந்திய தொழிற் கூட்டமைப்பின் துணைத் தலைவர் ரமேஷ் கைமால் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
தொடர்ந்து காற்றாலை மின்சாரம், சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் உதவி, வங்கி நிதி உதவி, எதிர்நோக்கும் பிரச்னைகள் குறித்து பசுபதிகோபாலன், வங்கி அதிகாரி மோகன்குமார் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் பங்கேற்று விளக்கமாக எடுத்துரைத்தனர். இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மரபுசாரா மின்சாரம் தயார் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.