தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது: ஆர்.கே.நகரில் ரூ.180 கோடி நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்து முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது: ஆர்.கே.நகரில் ரூ.180 கோடி நலத்திட்ட பணிகளை துவக்கிவைத்து முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

ஞாயிறு, பெப்ரவரி 28,2016,

ஆர்.கே. நகர் தொகுதியில் இன்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு  ரூ. 180.41 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா,’ஆர்.கே. நகர் தொகுதியை என் வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன் ” என்றும் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.

மேலும் முதல்வர் கூறுகையில்,

தமிழகத்தில் மின்வெட்டே இல்லாத நிலையானது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. ஏழை, நலிவடைந்தோர் நல வாழ்வுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொண்டு அரசு செயல்படுகிறது.

என்னை தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுத்து, முதல்– அமைச்சராக ஆக்கிய இந்த ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 180 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை, துவக்கி வைத்ததிலும், 193 கோடியே 26 லட்சம்ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதிலும் நான் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

2011–ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற எனது தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டி செயல்படுத்தி வருகிறது. எவ்வித அச்ச உணர்வு மின்றி மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் சட்டம்– ஒழுங்கு பேணி பாதுகாக்கப்படுகிறது. பல்வேறு புதிய தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எண்ணிலா மக்கள் நலத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. ‘‘அம்மா உணவகங்கள்’’, ‘‘அம்மா குடிநீர்’’, ‘‘அம்மா உப்பு’’, ‘‘அம்மா மருந்தகங்கள்’’, ‘‘அம்மா சிமெண்ட்’’ என எண்ணற்ற மக்கள் நலன் காக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘‘மக்களை நாடி அரசு’’ என்பதற்கேற்ப, பொதுமக்களின் குறைகளை களைய ‘‘அம்மா திட்டம்’’ மற்றும் ‘‘அம்மா சேவை மையம்’’ ஆகியவவை செயல் படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த இனிய விழாவில் 180 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நான் துவக்கி வைத்துள்ளேன். சென்னை காசிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகம் 92 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று என்னால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் 100 இடங்களில் குடிநீர் நிலையங்கள் அமைக்கப்படும் என நான் அறிவித்திருந்தேன். இன்று இந்த திட்டத்தை துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆர்.கே. நகர் பகுதியில் ஒரு குடிநீர் நிலையம் உள்ளிட்ட, 7 குடிநீர் நிலையங்களை, இன்று நான் திறந்து வைத்துள்ளேன். சென்னை மாநகரத்தில் சாதாரணப் பேருந்துகள் செல்ல இயலாத பகுதிகளில், உள்ள மக்கள் பயன்பெறும் வண்ணம் சிற்றுந்துகள் (ஸ்மால் பஸ்) இயக்கும் ஒரு முன்னோடி திட்டத்தினை இந்தியாவிலேயே முதன் முறையாக, எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

இன்று ஆர்கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கூடுதலாக இரண்டு ஸ்மால் பஸ் வழித்தடங்களை, துவக்கி வைத்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரு தடங்களில் கூடுதலாக 5 சிற்றுந்துகள் இயக்கப்படும். தண்டையார்பேட்டை இரட்டைக் குழி தெருவில் 100 கல்லூரி மாணவர்கள் தங்குவதற்கான பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி; புது வண்ணாரப்பேட்டையில், 24 காவலர் குடியிருப்புகள்; சென்னை வடகிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி; அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி; தண்டையார்பேட்டை ஜீவரத்தினம் சாலையில் அமைக்கப்படவுள்ள அம்மா மருந்தகம் மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடை; வடக்கு பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே நேரு நகர் மற்றும் எழில் நகர் பகுதிகளை இணைக்கும் வகையில் இரு வழிப்பாலம்; எண்ணூர் நெடுஞ்சாலை, ரயில்வே சந்தி கடவு எண் 2ஏ மற்றும் மணலி சாலை ரயில்வே சந்தி கடவு எண் 2பி–யை ஒருங்கிணைத்து அமைக்கப்படவுள்ள மேம்பாலம்.கொருக்குபேட்டை பாரதி நகரில் சுற்றுச்சூழல் பூங்கா; தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் சமுதாய நலக் கூடம்; தண்டையார்பேட்டை புஜ்ஜாம்மாள் தெருவில், சலவைத் தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள்; தண்டையார்பேட்டையில் வார்டு அலுவலகக் கட்டடம்; கேப்டன் காட்டன் கால்வாய்.இணைப்புக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்புச் சுவர் மற்றும் அணுகு சாலை; திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வடக்கு டெர்மினல் சாலை முதல், அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெரு வரை மற்றும் காமராஜர் சாலையில் இளையா தெரு முதல் அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெரு வரை மழைநீர் வடிகால் ஆகிய பணிகள், 193 கோடியே 26 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேற்றப்படும்.இந்த விழாவில் இப்பணிகளுக்கான அடிக்கற்களை நாட்டியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த இனிய விழாவில் அம்மா சிறு வணிகக் கடன் உதவித் திட்டம், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், திருமண உதவித் திட்டம், நலிந்தோர் உதவித் தொகை மற்றும் முதியோர் உதவித் தொகை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் 707 பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.

மேலும், தற்போது நான் துவக்கி வைத்த அடுக்குமாடி குடியிருப்பு வசதித் திட்டத்தின் கீழ் 1,036 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை, அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், 63 மாணாக்கர் சேர்க்கைக்கான அனுமதி கடிதம் மற்றும் 800 குடும்பங்களுக்கு அம்மா குடிநீர் திட்ட ஸ்மார்ட் கார்டு ஆகியவையும் இன்று வழங்கப்படுகின்றன.

இவற்றை வழங்கும் அடையாளமாக 14 பயனாளிகளுக்கு நான் இந்த மேடையில் திட்ட உதவிகளை வழங்க உள்ளேன். மற்றவர்களுக்கு அரசு அதிகாரிகள் இன்றே வழங்குவார்கள்.  நலத் திட்ட உதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் இவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்தார்.