தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு

சனி,ஜனவரி 7,2017,

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது பயிருக்கான இழப்பீடு, மீண்டும் பயிரிட மானியக் கடன் வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலினை செய்யப்படுவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 12-ஆம் தேதி வீசிய வர்தா புயல் காரணமாக நெல் பயிர்கள் சேதமடைந்தன. இதுதவிர, பருவ மழை பொய்த்தது, காவிரி நதி நீர் போதிய அளவு திறக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, புயல் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு குழுவினர் ஆய்வு செய்து சேத மதிப்புகளை கணக்கிட்டுச் சென்றனர். இந்த நிலையில், பயிர் பாதிப்புகளை தமிழக அரசின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள்- உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில்..: வேலூர் மாவட்டம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் போன்ற இடங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் சபீதா, மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் நேரில் பார்வைட்டனர். பின்னர், இதுதொடர்பாக வேலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அனைத்துத் துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

வறட்சி காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4,225 ஏக்கரில் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களை அவர் செய்த பின்னர், நிருபர்களிடம் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுவள்ளூர், கூத்தரம்பாக்கம், கண்ணன்தாங்கல், மதுரமங்கலம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு நடத்தினோம். மேலும், துறை அதிகாரிகள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பு நடத்தினர். அதில், மாவட்டத்தில் உள்ள 141 கிராமங்களில் 4,225 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீதம் நெற் பயிராகும்.இதுதொடர்பாக அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, வரும் 9-ஆம் தேதி அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள நிலங்கள் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தால் உரிய ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து களப் பணியாளர்கள் நேரில் ஆய்வு செய்து கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்வார்கள் என்றார்.
ஆய்வின் போது தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மாவட்ட ஆட்சியர் இரா.கஜலட்சுமி எம்.பி.க்கள் கே.என்.ராமச்சந்திரன், மரகதம் குமரவேல், முன்னாள் எம்எல்ஏ-க்கள் சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில்…: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பெஞ்சமின் ஆகியோர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வறட்சி பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வர்தா புயல், வறட்சி, உப்பு நீர் காரணமாக நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. சேத விவரம் குறித்து அதிகாரிகள் ஏற்கெனவே கணக்கெடுத்து உள்ளனர். தற்போது நாங்களும் நேரில் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்துள்ளோம் என்றார்.
ஆய்வின்போது, எம்எல்ஏ சிறுணியம் பலராமன், வறட்சி நிலை கண்டறியும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரபாகர், ஆட்சியர் சுந்தரவல்லி, பொன்னேரி சார் ஆட்சியர் தண்டபாணி, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் 1,020 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
வறட்சி பாதித்த பகுதிகளை மாநில சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான தமிழக அரசின் முதன்மைச் செயலர் அதுல்யமிஸ்ரா ஆகியோர், ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை சென்று பார்வையிட்டனர்.
ஆய்வின்போது, எம்பிக்கள் இரா.லட்சுமணன், க.காமராஜ், எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு, எம்.சக்ரபாணி, அ.பிரபு, உதவி ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜசேகரன் உடனிருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் தலைமையிலான அரசுக் குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அமைச்சர் எம்.சி.சம்பத், வேளாண்மைத் துறைச் செயலர் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர்.
இதையடுத்து, ககன்தீப்சிங் பேடி கூறியதாவது: தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த அறிக்கை வரும் 9-ஆம் தேதி முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

திருச்சி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் உரிய நிவாரண உதவி கிடைக்கும் என வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்தார்.
மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி, திருச்சி மாவட்ட வறட்சி ஆய்வுக் குழு கண்காணிப்பு அலுவலர் ராஜீவ் ரஞ்சன், மக்களவை உறுப்பினர் ப. குமார் (திருச்சி), ஆர்.பி. மருதைராஜா (பெரம்பலூர்) சட்டப்பேரவை உறுப்பினர்கள் பரமேஸ்வரி (மண்ணச்சநல்லூர்), செல்வராஜ் (முசிறி), மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் க. தர்ப்பகராஜ், வேளாண்துறை, வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறுகனூர் அருகேயுள்ள திருப்பட்டூர், சமயபுரம் அருகேயுள்ள ச.கண்ணனூர் உள்ளிட்ட பகுதிகளில் வறண்டு கிடக்கும் விவசாய நிலங்களை பார்வையிட்டனர்.

நாகை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 76 ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்றார் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்.
அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில், வருவாய்த் துறை செயலாளர் பி. சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி ஆகியோரடங்கிய குழுவினர் நாகை மாவட்ட வறட்சி பாதிப்புகள் குறித்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.