தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிப்பீடு செய்ய உடனடியாக, மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் வலியுறுத்தல்

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மதிப்பீடு செய்ய உடனடியாக, மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா, மத்திய உள்துறை அமைச்சரை தொலைபேசியில் வலியுறுத்தல்

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, தாமதமின்றி உதவித் தொகையை பரிந்துரைக்க மத்தியக் குழுவை விரைந்து அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தமிழக வெள்ள நிலைமை குறித்து எடுத்துரைத்தார்.

முன் எப்போதும் இல்லாத அளவில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நேரிட்டுள்ள சேதங்கள் குறித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா விளக்கிக் கூறினார். தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமது தலைமையின் கீழ் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவினர் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரிடம் விரிவாக எடுத்துக்கூறினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளுடன், தமிழக அரசின் பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மத்திய அரசின் பல்வேறு அமைப்புகள் வழங்கிய உதவிக்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். தமிழகம் முழுவதிலும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், வரும் 23-ம் தேதி திங்கட்கிழமைக்குள் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், மத்திய அரசிடமிருந்து பிற நிதியுதவியை கோரியும் விரிவான கோரிக்கை மனு மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.

மழை வெள்ளச் சேத விவரங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவும், தாமதமின்றி மத்திய உதவியைப் பெற பரிந்துரை செய்யவும், மத்தியக் குழு ஒன்றை விரைவாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அப்போது முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மத்திய அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசிடமிருந்து விரிவான அறிக்கை கிடைத்தவுடன், உடனடியாக மத்தியக் குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் உறுதி அளித்தார்.