தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி

செவ்வாய், மார்ச் 05, 2017 ,

சென்னை : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை ஆர்.கே. நகரில் நேற்று சனிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில், முதல்வர் பழனிசாமி பேசியது:
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் நடந்து வரும் போராட்டங்கள் மக்களின் மன உணர்வுகளை காட்டுகிறது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இந்தப் பிரச்னையில் திமுக தலையிடுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் இந்தத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த அனுமதி தந்ததே திமுகதான். இப்போது அவர்களே இந்த திட்டத்தை எதிர்த்து பேசுவது எந்த வகையில் நியாயம்?எம்.ஜி.ஆர். இறந்த போது ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள்தான், இப்போதும் அதிமுகவை எதிர்க்கிறார்கள். எங்களுக்கு மக்களின் ஆதரவு இருப்பதால், நாங்கள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றிடும் வகையில், நல்லாட்சி தொடரும் என்றார் முதல்வர் பழனிசாமி.