தமிழகத்தை ‘கடும் இயற்கை பாதிப்பு’ மாநிலமாக அறிவித்தது மத்திய அரசு:முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு

தமிழகத்தை ‘கடும் இயற்கை பாதிப்பு’ மாநிலமாக அறிவித்தது மத்திய அரசு:முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை ஏற்பு

வெள்ளி, டிசம்பர் 11,2015,

மத்திய அரசு, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ‘கடுமையான இயற்கை பாதிப்புகள்’ என அறிவித்துள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்துக்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ‘தேசிய பேரிடர்’ என அறிவிக்கும்படி பிரதமரிடம் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டது கவனிக்கத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதா  வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் முடிய நீடிக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை கால தாமதமாக 28.10.2015 அன்று துவங்கி பின்னர் ஒரு சில நாட்களில் மிக அதிக அளவு கன மழை பொழிந்தது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தமிழகத்தில் நான்கு கட்டங்களாக கன மழை பெய்தது. பெரு மழையின் காரணமாக பல ஏரிகள் நிரம்பியதால், உபரிநீர் திறந்து விடப்பட்டது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீரினால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர் மாவட்டத்தில், கெடிலம், பரவனாறு, செங்கால் ஓடை ஆறுகளில் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்கள், அதிலும் குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின.

முதல் கட்ட மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக பிரதமருக்கு 23.11.2015 அன்று நான் ஒரு கடிதம் எழுதினேன். அதில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்ததுடன், தமிழக வெள்ளச் சேதங்களை பார்வையிட மத்தியக் குழுவினை அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டதுடன், உடனடியாக நிதி உதவி அளிக்கும்படி கேட்டுக் கொண்டேன்.

மத்திய குழு வெள்ளச் சேதங்களை பார்வையிட்டு சென்ற பின், 1.12.2015 முதல் பெய்த கன மழையின் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மீண்டும் பாதிப்புக்குள்ளாயின. இதனைத் தொடர்ந்து, பிரதமர் 3.12.2015 அன்று வெள்ளப் பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு, பின்னர் தமிழக வெள்ளச் சேதங்கள் குறித்து என்னுடன் நேரில் விவாதித்தார். அப்போது வெள்ளச் சேதங்கள் பற்றி நான் விரிவாக எடுத்துக் கூறியதுடன், தமிழகத்திற்கு ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடர் என அறிவிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்டேன்.

எனது கோரிக்கையினை ஏற்ற மத்திய அரசு, தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கடுமையான பாதிப்புகள் – ‘Calamity of Severe Nature’ என அறிவித்துள்ளது. அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியிலிருந்து சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக 1 கோடி ரூபாய் வரையிலான பணிகளை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ள பரிந்துரைக்கலாம் என நாடாளுமன்ற செயலகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து ஒப்புதல் கடிதங்களை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேவைப்படும் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகள் குறித்த விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும்படி நான் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயை வழங்கும்படி நான் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.