5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் தேர்தல்

5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் தேர்தல்

சனி, மார்ச் 05,2016,

தமிழகம், புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகளுக்கு வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதேபோல, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளையும் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 22-ஆம் தேதியும், மேற்கு வங்கம் – மே 29, கேரளம் – மே 31, புதுச்சேரி – ஜூன் 2, அஸ்ஸாம் – ஜூன் 6ஆம் தேதி என அவற்றின் சட்டப்பேரவையின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதைக் கருத்தில் கொண்டு, இந்த மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலை அறிவிப்பது தொடர்பாக தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் நஜீம் ஜைதி தலைமையில் தேர்தல் ஆணையர்கள் அச்சல் குமார் ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத், துணைத் தேர்தல் ஆணையர்கள் உமேஷ் சின்ஹா, சந்தீப் சக்சேனா, தலைமை இயக்குநர் சுதீப் ஜெயின் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
ஒரே கட்டத் தேர்தல்: இந்தக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் தேதிகள், அதையொட்டிய முக்கிய அம்சங்கள் குறித்து செய்தியாளர்களிடம் தேர்தல் ஆணையர்களுடன் சேர்ந்து நஜீம் ஜைதி கூறியதாவது:
மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் மே 16-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். இதையொட்டி, தேர்தல் அறிவிக்கை ஏப்ரல் 22 (வெள்ளி) வெளியிடப்படும். அன்றைய தினம் முதல், வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய ஏப்ரல் 29 கடைசி நாள். மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30-ஆம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெற மே 2-ஆம் தேதியும் கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் மே 21-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். இதே தேதிகளில் மொத்தம் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படும்.
அஸ்ஸாம்: மொத்தம் 126 தொகுதிகள் கொண்ட அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டத் தேர்தல் 65 தொகுதிகளுக்கு ஏப்ரல் 4-ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 61 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11-ஆம் தேதியும் நடத்தப்படும்.
மேற்கு வங்கம்: மொத்தம் 294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். இதில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 4,11 ஆகிய இரு நாள்களில் இரு பிரிவுகளாக நடத்தப்படும். முதலாவது பிரிவில் 18 தொகுதிகளுக்கும், இரண்டாவது பிரிவில் 31 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். 56 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 17, 62 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 21, 49 தொகுதிகளுக்கு நான்காம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 25, 53 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30, 25 தொகுதிகளுக்கு ஆறாம் கட்ட தேர்தல் மே 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
கேரளம்: 140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வரும் மே 16-இல் தேர்தல் நடத்தப்படும்.
மேற்கண்ட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 19-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் ஏற்பாடுகள்: இந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதி பெறும் அனைத்து வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்த்தல், நீக்குதல் போன்ற நடவடிக்கைகள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாமில் 97.90 சதவீதம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் 100 சதவீத அளவுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு வாக்குரிமைச் சீட்டு வழங்கப்படும். அதில், வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர் எந்த வரிசையில் இருக்கும் என்பதை விளக்கும் பதிவு எண், அவரது புகைப்படம் இருக்கும். வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சக்கர நாற்காலி, சாய்தள வசதிகள் இருக்கும்.
மாடல் வாக்குச்சாவடி: குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் முற்றிலும் பெண் தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள், பெண் காவலர்கள், பெண் தேர்தல் பொறுப்பாளர்கள் அடங்கிய வாக்குச்சாவடிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்துக்கு ஒரு “மாடல் வாக்குச்சாவடி’ அமைக்கப்படும். மேலும், இந்த முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருடன் அவரது புகைப்படமும், கட்சியின் சின்னமும் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள், எந்தெந்த வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது கலவை முறையில் தேர்வு செய்யப்படும். இதற்கென சிறப்பு மென்பொருள் பயன்படுத்தப்படும்.
கண்காணிப்பு: தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பொறுப்பாளர்கள், பார்வையாளர்கள், பறக்கும் படையினர் உள்ளிட்டோர் பயணம் செய்யும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும். இதன் மூலம் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் புகார் வந்தால் அங்கு கண்காணிப்புக் குழு சரியாகவும் தாதமின்றியும் செல்கிறதா என்பதை தேர்தல் ஆணையம் மேற்பார்வையிடும்.
பாதுகாப்பில் 85,000 மத்தியப் படையினர்: தேர்தல் பாதுகாப்புக்காக மாநில காவல் துறையினருக்கு உதவியாக சுமார் 75 ஆயிரம் முதல் 85 ஆயிரம் மத்திய காவல் படைகளின் வீரர்கள் ஏற்கெனவே தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாக்குச்சவாடிக்கு வெளியே மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்படும். பதற்றம் நிறைந்த தொகுதிகளில் மத்திய படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர். தேர்தலுக்கு முந்தைய நாள் முதல் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல, வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மத்திய படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டது என்றார் நஜீம் ஜைதி.
தமிழகத் தேர்தலில்…
மொத்தமுள்ள தொகுதிகள்
234
வேட்பு மனு தாக்கல்
ஏப்ரல் 22
மனு தாக்கலுக்கு கடைசி நாள்
ஏப்ரல் 29
வேட்பு மனுக்கள் பரிசீலனை
ஏப்ரல் 30
திரும்பப் பெறுதல்
மே 2
வாக்குப்பதிவு
மே 16
வாக்கு எண்ணிக்கை
மே 19
தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை
மொத்த வாக்காளர்கள்: 5 கோடியே 79 லட்சத்து
15 ஆயிரத்து 482
ஆண்கள்: 2 கோடியே 88 லட்சத்து
17 ஆயிரத்து 750
பெண்கள்: 2 கோடியே 90 லட்சத்து
93 ஆயிரத்து 349
மூன்றாம் பாலினத்தவர்: 4 ஆயிரத்து 383
வாக்குச் சாவடிகள்: 65 ஆயிரத்து 616
17 தொகுதிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்வதற்கான இயந்திரங்கள்

நோட்டாவுக்கு சின்னம்…

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைத் தெரிவிக்கும் நோட்டா வாய்ப்புக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் முறையாக இந்த சின்னம் பயன்படுத்தப்பட உள்ளது.
* தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் மே 16-இல் ஒரே கட்டமாகத் தேர்தல்.
* மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 11 முதல் மே 5 வரை 6 கட்டங்களாகத் தேர்தல்
* அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11-இல் இரண்டு கட்டங்களாகத் தேர்தல்.