தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் கழகம் சார்பில், இருங்காட்டுக்கோட்டையில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைக் கழககப் பேச்சாளர்-நடிகர் திரு. ராமராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்று, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்தனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், புதூரில் நடைபெற்ற சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில், கழக எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் திரு. வி.அலெக்ஸாண்டர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்று, கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறினர். இக்கூட்டத்தில் முதலமைச்சரின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, 568 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சாத்துமாநகரில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில், கழக நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆயிரத்து 568 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை, அனுமன்தீர்த்தம், கல்லாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில், தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், தலைமைக் கழக பேச்சாளர்-நடிகர் திரு. குண்டுகல்யாணம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தனர். பொதுமக்களுக்கு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், மார்த்தாண்டம் அருகே விளவன்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இருசக்கர வாகன ஓட்டிகள் 30 பேருக்கு தலைக்கவசங்கள் வழங்கப்பட்டன.