தமிழகம் முழுவதும் ரூ.71.55 கோடி மதிப்பிலான வருவாய்த்துறை கட்டிடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் ரூ.71.55 கோடி மதிப்பிலான வருவாய்த்துறை கட்டிடங்கள்:முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

செவ்வாய், டிசம்பர் 29,2015,

சென்னை,தமிழகம் முழுவதும் ரூ.71.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாவட்ட கலெக்டர் வளாகம்

அரசின் மக்கள் நலத் திட்டங்களை ஏழை-எளிய மக்களிடையே முறையாக கொண்டுசென்று அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய்த்துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், வருவாய்த்துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்தக் கட்டிடங்கள் கட்டுதல், அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் – திருப்பூர் தெற்கு வட்டம், வீரபாண்டி கிராமத்தில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 901 சதுர அடி கட்டிட பரப்பளவில், 55 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தரைத் தளம் உள்ளிட்ட எட்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா 28-ந் தேதி (நேற்று) தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

என்னென்ன அலுவலகங்கள்

இந்த பெருந்திட்ட வளாகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 40 துறைகளுக்கான அலுவலக அறைகள், 2 பெரிய மற்றும் 2 சிறிய கூட்டரங்குகள், விருந்தினர் மாளிகை, மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, மாவட்ட வருவாய் அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, திட்ட அலுவலர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, அலுவலர்களுக்கான குடியிருப்புகள், பொது மக்களுக்கான காத்திருப்புக் கூடம், குடிநீர் வசதி, மின் தூக்கி வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி, உணவகக் கட்டிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இப்பெருந்திட்ட வளாகம், பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாகவும், அனைத்து துறைகளைச் சார்ந்த அலுவலர்களை ஒரே இடத்தில் சந்தித்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாகவும் உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் – பல்லாவரம், அரியலூர் மாவட்டம் – கூவாத்தூர் (வடக்கு) மற்றும் கத்தாஹர் (வடக்கு), சேலம் மாவட்டம் – சிங்கிபுரம், காட்டுவேப்பிலைப்பட்டி, சிவதாபுரம், கருமாபுரம், போடிநாயக்கன்பட்டி, கல்பாரப்பட்டி, எஸ். அம்மாப்பாளையம், கரூர் மாவட்டம் கே.பேட்டை, விருதுநகர் மாவட்டம் போடம்பட்டி, செட்டிக்குறிச்சி, வக்கனகுண்டு, திருவள்ளூர் மாவட்டம் – மாதவரம், சினக்காவனம்- மி , சினக்காவனம்- மிமி , கொரட்டூர், கத்திவாக்கம், எர்ணாவூர், சாத்தான்காடு, மணலி, பொன்னேரி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 96 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 23 கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்பு கட்டிடங்கள்;

சென்னை-சேப்பாக்கத்தில் 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை இயக்குனரக அலு வலக இணைப்புக் கட்டிடம்;

ரூ.71 கோடி செலவு

தர்மபுரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 2 கோடியே 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குறுவட்ட நில அளவருக்கான 16 குடியிருப்புகளுடன் கூடிய அலுவலகக் கட்டிடங்கள்; என மொத்தம் 71 கோடியே 55 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வருவாய் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நெல்லை மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் ஆகிய ஐந்து புதிய வருவாய் வட்டங் களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.