தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக உள்ளாட்சி தேர்தலை மே 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

புதன்கிழமை, பிப்ரவரி 22, 2017,

சென்னை ; தமிழக உள்ளாட்சி தேர்தலை வரும் மே14–ம் தேதிக்குள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த அக்டோபர் மாதம் 2 கட்டமாக தேர்தல் நடக்க இருந்தது. ஆனால், இந்த தேர்தலில் எஸ்.டி. பிரிவினருக்கு போதிய இடஒதுக் கீடு வழங்கவில்லை என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தை முறையாக பின்பற்றி பிறப்பிக்கப்படவில்லை’ என்று கூறி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டார்.மேலும், புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் விசாரிக்கப்படுகிறது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘உள்ளாட்சி தேர்தல் இந்த தேதியில் நடத்தப்படும் என்று தெளிவான பதிலை தெரிவிக்கவேண்டும்’ என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீலுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.குமார், ‘தேர்தல் பணி குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்குவது, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பது உள்ளிட்ட பணிகள் பல உள்ளதால், உள்ளாட்சி தேர்தலை மே 30-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும்’ என்றார்.
இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. தி.மு.க. சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், வேண்டுமென்றே காலதாமதம் செய்து இழுத்தடிக்கிறது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் கடைசி நாள் அறிவிப்பு உள்பட தேர்தல் பணிகள் அனைத்தையும் ஏப்ரல் 14-ந் தேதிக்குள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்து முடித்து விடவேண்டும். அதன்பின்னர் மே 14-ந் தேதிக்குள், உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.