தமிழக கடலோர பாதுகாப்பிற்காக மீனவர்களுக்கு வழங்கப்படும் ஆபத்துக்கால எச்சரிக்கை கருவிகளுக்கு மத்திய அரசு 75 சதவீத மானியம் அளிக்க வேண்டும் – தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

தமிழக கடலோர பாதுகாப்பிற்காக மீனவர்களுக்கு வழங்கப்படும் ஆபத்துக்கால எச்சரிக்கை கருவிகளுக்கு மத்திய அரசு 75 சதவீத மானியம் அளிக்க வேண்டும் – தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர்  ஜெயலலிதா வலியுறுத்தல்

சனி, டிசம்பர் 12,2015,

தமிழக கடலோர பாதுகாப்பிற்காக மீனவர்களுக்கு வழங்கப்படும் ஆபத்துக்கால எச்சரிக்கை கருவிகளுக்கு மத்திய அரசு 75 சதவீத மானியம் அளிக்க வேண்டும், சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதியாக்க வேண்டும் – கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதலாவது அலகில், விரைவில் மீண்டும் மின்உற்பத்தியை தொடங்க வேண்டும் என மத்திய அரசை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 26-வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் இன்று அமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். தமிழ்நாட்டில், சென்னை, காஞ்சிபும், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக, பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாலும், அதனை தாம் நேரடியாக மேற்பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை வழிநடத்திச் செல்வதாலும், தம்மால் இந்த மாநாட்டில் நேரடியாக கலந்துகொள்ள இயலவில்லை என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள விஷயங்கள் குறித்து கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இயற்கை சீற்றங்கள் குறித்து இயந்திர மீன்பிடி படகுகளுக்கு தமிழக அரசு 30 ஆயிரம் ஆபத்துக்கால எச்சரிக்கை கருவிகளை வழங்கவிருக்கிறது;

நடப்பு ஆண்டு முதல் படிப்படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்;

இதற்காக இந்திய அரசு முதல் தவணையாக 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளது;

இந்த திட்டத்தின்கீழ் மேலும் அதிக அளவு மீனவர்கள் பயனடையும் வகையில், இந்திய அரசு 75 சதவீத மானியம் அளிக்க வேண்டும்;

சின்னமுட்டம், கொளச்சல், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை அமைக்கவும், அவற்றை விரைந்து முடிக்கவும் வசதியாக தமிழக அரசு கோரியுள்ளபடி 203 கோடியே 70 லட்சம் ரூபாயை விரைந்து வழங்க வேண்டும்;

மேலும், 2012-2013, 2013-2014, 2014-2015 ஆகிய ஆண்டுகளில் தேசிய சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின்கீழ் எஞ்சியுள்ள தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்;

30 ஆயிரம் மீனவர்களுக்கு இயற்கை சீற்ற எச்சரிக்கை ஒலிபரப்பு கருவிகளை வழங்க மானிய உதவியும் வழங்கப்பட வேண்டும்;

கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய தமிழகத்தில் 11 மீன்பிடி துறைமுகங்கள், 36 மீன் இறங்கு தளங்கள், 254 மீன் இறங்கு மையங்கள் ஆகியவற்றை தமிழக அரசு தேர்வு செய்துள்ளது;

ஆப்ரேஷன் ஹம்லா என்ற பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுக்கு 2 முறை கடலோர காவல்படையினருடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது;

மீனவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது மற்றும் 39 ஆயிரத்து 401 மீன்பிடி தளங்களுக்கு பதிவு சான்றிதழ்களை வழங்குவது ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன;

உயர்வேக டீசலுக்கு மத்திய கலால்வரியை திரும்ப பெறுவதற்கு மீனவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை செயல்படுத்த முடியாததாகும்;

கடந்த ஆண்டு ஜுன் மாதம் 3-ம் தேதியும், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதியும் தான் பிரதமரிடம் அளித்த மனுக்களில் இதுபற்றி குறிப்பிட்டிருப்பதாகவும், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்;

மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை நேரடியாக பாதிக்கும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்;

தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் தமிழக கடலோர பகுதியில் 35 இடங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டுள்ளன;

இதனை மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது;

இதன்மூலம் மீன்வளம் மேலும் அதிகரிக்கும்- இதுபோன்ற செயற்கை பவளப்பாறைகளை மேலும் கூடுதலாக அமைக்க மத்திய அரசு தாராளமான நிதியுதவி வழங்க வேண்டும்;

ஆழ்கடல் மீன்பிடிப்பை மேம்படுத்துவதற்காக டூனா படகுகளை இயக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது;

கடலோர ஆழம் குறைந்த பகுதிகளில் மீன்பிடிப்பதை தவிர்த்து, இத்தகைய ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட மீனவர்களுக்கு இது வசதியாக இருக்கும்;

இதற்காக தமிழக அரசு கோரியபடி ஆயிரத்து 520 கோடி ரூபாய் விரிவான சிறப்பு நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்;

இத்திட்டத்தின்கீழ் ஆழ்கடல் டூனா மீன்பிடி படகுகளை வாங்குவது- மூக்கையூர், ராமேஸ்வரம், எண்ணூர் மீன்பிடி தளங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியவையும் அடங்கும்;

டூனா மீன்பிடி படகுகளை வாங்குவதற்காக 975 கோடி ரூபாய் திட்டமும், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் மீன் இறங்குதளம் அமைக்க 113.9 கோடி ரூபாயிலான திட்டமும் ஏற்கனவே மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது – இத்திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்;

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சந்திக்கும் எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் கடந்த 2013-ம் ஆண்டு கண்டறியப்பட்டு, அதனை ஒடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது;

வனப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு, 5 மாவோயிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர் – உள்ளூர் காவல் நிலையங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளன;

நிலைமையை சமாளிக்க கூடுதல் காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்- நீலகிரி மாவட்டத்தை பாதுகாப்பு தொடர்பான செலவினப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே தமது தலைமையிலான அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்தை கோரியுள்ளது;

பாதுகாப்பிற்காக செலவிடப்பட்ட 2 புள்ளி நான்கு கோடி ரூபாயை திருப்பி அளிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த செயல்திட்டத்தின் கீழ் 10 புள்ளி ஒன்று ஒன்று கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது;

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களில், அருகாமை மாவட்டங்களை சேர்ந்த அனைத்து ஆட்சித் தலைவர்களும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து பேச வேண்டும் என்றும், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கட்டமைப்புகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்;

தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இதற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன;

சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா தொடர்பாக தமது தலைமையிலான அரசு ஏற்கனவே தனது கருத்துகளை தெளிவாக்கிவிட்டது;

உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய சாலை பாதுகாப்பு ஆணையகம் மாநில அரசின் அதிகாரங்களை பறித்துவிடும்;

இதன்மூலம் இத்துறையில் மாநில அரசுகள் சமூக நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாது;

மேலும் இந்த மசோதா மாநிலங்களின் நிதி அதிகாரத்தையும், வருவாய் ஆதாரங்களையும் குறைப்பதாக உள்ளது;

தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் நாட்டிலேயே மிகக்குறைந்த கட்டணத்தில் செயல்பட்டு வருகின்றன;

புதிய மசோதா அமலுக்கு வருமானால், இது சாத்தியமில்லாமல் போகலாம் – எனவே இந்த வரைவு மசோதாவை மாநில அரசுகளுடன் ஆலோசித்து முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்;

கூடங்குளம் அணுமின் நிலைய முதலாவது அலகில் உற்பத்தி செய்யப்படும் ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தில் சுமார் 563 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது;

கடந்த ஜுன் மாதம் 24-ம் தேதியிலிருந்து பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ள இந்த அலகு, எப்போது மீண்டும் தொடங்கும் என்பதை இந்திய அணுசக்தி கழகம் இதுவரை தெளிவாக தெரிவிக்கவில்லை;

எனவே, தமிழ்நாட்டின் மின்தேவையை சமாளிக்க கூடங்குளம் முதலாவது அலகில், விரைவில் மீண்டும் உற்பத்தியை தொடங்க இந்திய அணுசக்தி கழகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்;

தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்களை தொடங்க, ரயில்வே அமைச்சகத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருக்கிறது என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.