தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வலியுறுத்தி “அதிமுக எம்.பிக்கள் மத்திய அரசிடம் மனு”

தமிழக கூட்டுறவு வங்கிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வலியுறுத்தி “அதிமுக எம்.பிக்கள் மத்திய அரசிடம் மனு”

வியாழன் , நவம்பர் 24,2016,

தமிழக கூட்டுறவு அமைப்புகளுக்‍கு 3 ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்‍ கடன் உடனடியாக வழங்க வேண்டும், தொடக்‍க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கடனை திரும்பி செலுத்த அனுமதிக்‍க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லியிடம் அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்‍கள் டெல்லியில் நேற்று  வழங்கினர். 

மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லியிடம் அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்‍கள் கோரிக்‍கை மனு ஒன்றை அளித்தனர். வேளாண் பருவத்தின் உச்சகட்டமான நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தின் விவசாயப் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி எடுக்‍க வேண்டிய உடனடி நடவடிக்‍கை குறித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்த யோசனைகள் இந்த மனுவில் எடுத்துரைக்‍கப்பட்டுள்ளன. 

மேலும், முதலமைச்சர்  ஜெயலலிதா, விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு ஏராளாமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்றும், அந்த வகையில் விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, கடந்த மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையிலிருந்த கடன் தொகை, சுமார் 5 ஆயிரத்து 781 கோடியே 92 லட்சம் ரூபாய் தொகையை, 16 லட்சத்து 94 ஆயிரம் சிறு விவசாயிகளிடமிருந்து தள்ளுபடி செய்து ஆணையிட்டுள்ளார் என்றும், 64.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், காவேரி டெல்டா மாவட்ட சிறப்பு சம்பா தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

தொடக்‍க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ரொக்‍கப் பணம் வாங்காமல் விவசாயிகளுக்‍கு உரம், விதை போன்றவற்றை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தத் தொகை விவசாயிகளின் பயிர்க்‍ கடனில் சேர்த்துக்‍கொள்ளப்படும் -தொடக்‍க கூட்டுறவு சங்கங்கள் உழவுக்‍ கருவிகள் போன்றவற்றை விவசாயிகளுக்‍கு ரொக்‍கமின்றி வாடகைக்‍கு விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்‍காட்டப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு அமைப்புகள் மூலம், விவசாயிகளுக்‍கு முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கியுள்ள சலுகைகள், அந்த மனுவில் விளக்‍கப்பட்டுள்ளதுடன், ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அறிவிப்பால் தற்போது, விவசாயிகளுக்‍கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை போக்‍க மத்திய அரசு உடனடியாக எடுக்‍க வேண்டிய நடவடிக்‍கைகள் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, தொடக்‍க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கடனை திரும்பி செலுத்த அனுமதிக்‍க வேண்டும்- தமிழக கூட்டுறவு சங்கங்களுக்‍கு பயிர்க்‍ கடனாக உடனடியாக 3 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும்- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கட்டுப்பாடின்றி, தொடக்‍க கூட்டுறவு சங்கங்களுக்‍கு வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதி தேவை- வர்த்தக வங்கிகளைப் போல, மத்திய கூட்டுறவு வங்கிகளும் டெபாசிட் பெற்றுக்‍ கொள்ள அனுமதிக்‍கப்பட வேண்டும்- பயிர் இன்சூரன்ஸ் பிரீமியத் தொகையை விவசாயிகளின் கணக்‍கிலிருந்து காசோலை மூலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த அனுமதிக்‍க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகள் மத்திய நிதியமைச்சரிடம் அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்‍கள் வழங்கியுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.