தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது:அன்றே இடைக்கால பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது:அன்றே இடைக்கால பட்ஜெட்  தாக்கல்

செவ்வாய், பெப்ரவரி 09,2016,

தமிழக சட்டசபை வரும் 16–ந்தேதி கூடுகிறது. மேலும் அன்று தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 20–ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது நடந்த விவாதத்தின் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.

இதற்கு முதல்வர் ஜெயலலிதா விரிவாக பதில் அளித்து பேசினார். இந்த நிலையில் தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டம் வருகிற 16–ந்தேதி தொடங்குகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெறும் கடைசி கூட்டத் தொடர் இது. எனவே இந்த கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் மீதான விவாதத்தை தொடர்ந்து நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதில் அளிப்பார். இந்த கூட்டத் தொடர் 4 நாட்கள் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்தாவது:–

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.2.2016–ம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னை–9 தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும் அன்று காலை 11 மணிக்கு 2016–2017 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், நடப்பு நிதியாண்டிற்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை, வரும் 20-ம் தேதி பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.