பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய், பெப்ரவரி 09,2016,

சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி இறந்த தமிழக ராணுவ வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காஷ்மீர் மாநிலம், சியாச்சின் பகுதியில் 3-2-2016 அன்று ஏற்பட்ட பனிச் சரிவில் இந்திய நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களான, வேலூர் மாவட்டம், பாகாயம் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் எம்.ஏழுமலை; தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழு பகுதியைச் சேர்ந்த ஹவில்தார் எஸ்.குமார்; மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், சொக்கதேவன்பட்டியைச் சேர்ந்த சிப்பாய் ஜி.கணேசன்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், குடிசாதனப்பள்ளியைச் சேர்ந்த சிப்பாய் என்.ராமமூர்த்தி ஆகியோர் சிக்கினர்.
இவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவம் 9-2-2016 அன்று அவர்கள் உடல்களை மீட்டுள்ளனர். நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் பனிச் சரிவில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து  நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் ஏழுமலை, குமார், கணேசன், மற்றும் ராமமூர்த்தி ஆகியோரை இழந்துவாடும் அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களது குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்  உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.