தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள்,கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம்

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள்,கலை நிகழ்ச்சிகள்  மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம்

சனி, மார்ச் 12,2016,

வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 16ம தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக, சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற வாக்காளர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாமை, தேர்தல் அதிகாரியும், சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரியுமான திரு. சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் திரு. கோவிந்தராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மூலமும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. தொடர்ந்து, காதுகேளாதாவர்களும் ஆர்வமுடன் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் முதல்முறையாக செய்கை மொழி மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் கையெழுத்து இயக்கமும் துவக்கி வைக்கப்பட்டது.

சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்கு பதிவான மையங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்றும் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே, ராமநாதபுரத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு. நடராஜன் துவக்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதேபோல், நீலகிரி மாவட்டம் உதகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற அவர்கள், வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் முடிவில், 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.