தமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000 பேரை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

தமிழக நிரந்தர முதல்வர் அம்மா :மதுரையில் 25,000 பேரை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

செவ்வாய், ஜனவரி 12,2016,

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள 25 ஆயிரம் இளைஞர்– இளம்பெண்கள், மாணவ– மாணவிகளை அ.தி.மு.க.வில் இணைக்கும் விழா மதுரை கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். 25 ஆயிரம் இளைஞர்–இளம்பெண்களை அ.தி.மு.க.வில் இணைத்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:–

தமிழகத்தில் முதல்வர் அம்மா பொற்கால ஆட்சி நடத்தி முத்தான சாதனைகளை செய்து வருகிறார். இன்று மதுரையில் மாநாடு போல இளைஞர்கள்–இளம் பெண்கள் திரண்டு இருக்கிறீர்கள். அமைச்சர் செல்லூர் ராஜூ எதை செய்தாலும் புதுமையாக செய்து விடுவார். இப்போது நாங்களும் தேனி மாவட்டத்தில் இதை விட அதிகமான உறுப்பினர்களை கழகத்தில் இணைக்கும் பணியை செய்ய வேண்டிய கட்டாயத்தை செல்லூர் ராஜூ எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்.

இங்கே நீங்கள் அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தில் சேர்ந்து உள்ளீர்கள். நீங்கள் முதல்வர் அம்மாவை லட்சியத்தலைவராக ஏற்று கொண்டு உள்ளீர்கள்.

தமிழக மக்களுக்காக பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்தி நமது உரிமைகளை மீட்டு தந்தார் அம்மா. முல்லை பெரியாறு, காவிரி நதிநீர் பிரச்சனைகளில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டினார். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய போது 16 லட்சம் உறுப்பினர்களை கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. பின்னர் அம்மா பல்வேறு சோதனைகளை வேதனைகளை எல்லாம் கடந்து வந்து அ.தி.மு.க. என்ற ஆலமரத்தை மிக வலுவுள்ளதாக மாற்றி உள்ளார்.

இன்றைக்கு 1½ கோடி தொண்டர்கள் கொண்ட கட்டுப்கோப்பான இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. இதனை எந்த கொம்பாதி கொம்பனாலும் வீழ்த்த முடியாது. முதல்வர் அம்மா கல்வித்துறைக்கு 4 ஆண்டுகளில் ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மாணவ சமுதாயத்துக்கு எண்ணற்ற திட்டங்களை தந்துள்ளார். இன்னும் 15 ஆண்டுகளில் தமிழகம் கல்வித்துறையில் நாட்டில் முதல் இடத்தில் இருக்கும். எந்த நாட்டிலும் வேலைபார்க்கும் தகுதியை தமிழக இளைஞர்கள் பெறுவார்கள். ஏழைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் சிறந்து விளங்கும்.

எனவே இளைய சமுதாயம் மீண்டும் அம்மாவை 6–வது முறையாக முதல்வராக சபதமேற்று, அதற்கான பணிகளை தீவிரமாக செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசியதாவது:–

இங்கே ஒரு மாநாடு போல இளைஞர்களும், இளம்பெண்களும் திரண்டு இருக்கிறீர்கள். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வரும் அம்மா அவர்களின் தலைமையை ஏற்று புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளீர்கள். இன்று முதல் 1½ கோடி உறுப்பினர்கள் கொண்ட மாபெரும் இயக்கத்தில் பிள்ளைகளாக மாறி இருக்கிறீர்கள். இனி உங்களுக்கு அ.தி.மு.க. என்ற இயக்கம் பக்க பலமாக இருக்கும்.

அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு சாதனை திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. சொல்லியதையும், சொல்லாததையும் முதல்வர் அம்மா செய்து வருகிறார். ஆற்றில் மணலை கூட எண்ணிவிடலாம். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எண்ண முடியாது. எனவே மீண்டும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். தமிழக நிரந்தர முதல்வராக அம்மா வருவார்.இவ்வாறு அவர் பேசினார்.