தமிழக பள்ளிக் கல்வித் துறை -தென்கொரிய குடியரசு சார்பில் கருத்தரங்கு ; அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு

தமிழக பள்ளிக் கல்வித் துறை -தென்கொரிய குடியரசு சார்பில் கருத்தரங்கு  ; அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு

வெள்ளி, நவம்பர் 11,2016,

தமிழக பள்ளிக் கல்வித் துறை -தென்கொரிய அரசு கல்வி அகாதெமி இணைந்து ஒரு நாள் கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தின. இதில்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார்.

இதில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன், கருத்தரங்கு தொடக்க விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தை அறிவுத் தலைநகரமாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்தின் அடிப்படையில். தமிழக பள்ளி கல்வித் துறை, தென்கொரியாவைச் சேர்ந்த அரசு கல்வி அகாதெமியுடன் இணைந்து திட்டம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
அதன்படி, தமிழகத்தின் கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இடைநிற்றலைக் குறைத்தல், கற்றலை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கற்பிக்கும் முறை என பல்வேறு சிறப்புத் திட்டங்களை கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அறிந்துகொள்ள உள்ளனர்.
அதேபோல், தென்கொரிய கல்வி முறை, மேற்கொள்ளப்பட்டிருக்கும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை அந்த நாட்டு கல்வியாளர்கள் பகிர்ந்துகொள்ள உள்ளனர். இதன் மூலம் பல திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளோம். நமது கல்வி முறையை இன்னும் எப்படி மேம்படுத்த முடியும் என்பது குறித்தும் இதன் மூலம் ஆராயப்படும் என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் பாண்டியராஜன்;

வரும் கல்வியாண்டில் பள்ளிக் கல்விக்கு புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், தற்போதைய பாடத் திட்டத்தின் அடிப்படையில் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி இப்போதுதான் தொடங்கப்பட உள்ளது.
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே புதியப் பாடத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதிலும் பெரிய அளவில் மாற்றம் இருக்காது. இருந்தபோதும் முன்பைவிட சிறப்பானதாக இருக்கும். முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய பாடத் திட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.