தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ரயில்வே பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை: முதல்வர் ஜெயலலிதா கருத்து

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ரயில்வே பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை: முதல்வர் ஜெயலலிதா கருத்து

வெள்ளி, பெப்ரவரி 26,2016,

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த பட்ஜெட் தவறிவிட்டதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் டெல்லி-சென்னை இடையே தனி சரக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை முதலமைச்சர் வரவேற்றுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ரயில்வே பட்ஜெட்டில் புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே மூலதன செலவினம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தபட்டு இந்த  நிதியாண்டிற்கு ரயில்வே செயல்பாடுகளுக்கு ரூ1.21லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.இந்த பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படாதது ஆச்சரியத்தை அளிப்பதாக இருக்கிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம்தேதியன்று நான் எழுதிய கடிதம் மூலம் வேண்டுகோள்கள் விடுத்து இருந்தேன். இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்காக நான் குறிப்பிட்ட பல திட்டங்கள் எதுவும் இடம் பெறவில்லை. ரயில் ஆட்டோ மையம் சென்னையில் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை நான் வரவேற்கிறேன். இந்த மையம் மூலம் சென்னை பெரும் ஆட்டோ மொபைல்மையமாக ஆகும். இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பெரும் ஆட்டோ மொபைல் உற்பத்தி மையமாக சென்னை ஆகும்.

டெல்லியில் இருந்து சென்னைக்கு வடக்கு-தெற்கு பிரத்யேக சரக்கு ரயில்பாதை அறிவிக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். இந்த சரக்கு ரயில் பாதையும் உத்தேசிக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை பாதை விஜயவாடாவில்  இடம்பெறவில்லை. இந்த பாதை தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட வேண்டும்.இதன்மூலம தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கையான சென்னை-தூத்துக்குடி பிரத்யேக சரக்கு ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றி இருக்கும்.

சென்னை-தூத்துக்குடி சரக்குரயில் பாதை, சென்னை-மதுரை கன்னியாகுமரி அதிவேக பயணிகள் இணைப்பு மற்றம் கோயம்புத்தூர்-மதுரை அதிவேக பயணிகள் இணைப்பு ஆகிய  3 திட்டங்கள் 2023ம் ஆண்டு தொலை நோக்கு திட்டத்தில் உள்ளன. அதனைதமிழக அரசு எஸ்.பி.வி மூலமாக செயல்படுத்த கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்திருந்தது. இருப்பினும் ரயில்வே அமைச்சர் தனது பட்ஜெட்டின் 2 தூண்களில் ஒன்று புதிய கட்டுமானங்களை உருவாக்குவது ஆகும். ரயில் துறையில் மாநில அரசுகளுடன் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. இது கூட்டாட்சி ஒத்துழைப்பை குறிப்பதாக உள்ளது. பரஸ்பர புரிந்துணர்வு வரைவுவினை முடிவு செய்வதற்கு மாநில அரசுகளுடன் சிறிய அளவிலேயே ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. அந்த வரைவில் முக்கியமான விஷயங்களில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது.

தற்போதைய மாநில-மத்திய அரசு ரயில் திட்ட செயல்பாடு வரைவு திட்டத்தில் 75சதவீத பங்கு மறறும் முழு நில மதிப்பை மாநில அரசுகளே ஏற்கவேண்டும். அவை அனைத்தும் ரயில்வே அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும். இது ஏற்க முடியாத ஒன்றாகும். எனது அரசு ரயில்வே அமைச்சகத்துடன் மீண்டும் சேர்ந்து பரஸ்பர புரிந்துணர்வு விதிமுறைகள் சமச்சீராகவும் ஏற்க கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தயாராகியுள்ளது.

ரயில் பயணிகள் வசதிகளுக்கு தீவிர கவனம் செலுத்தி இருப்பதை நான் வரவேற்கிறேன். அதில் பெண் பயணிகள் பாதுகாப்பு, மாற்றுதிறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் சிறந்த முறையில் ரயிலில் ஏறுவதற்கு வசதிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறை தீர்ப்பதற்கு டிஜிட்டல் முறைகளை மேற் கொள்வது சாதகமான நடவடிக்கைகளாக இருக்கும்.அந்த நடவடிக்கைகள் பல  அரசு-தனியார் கூட்டு நடவடிக்கை முயற்சிகளை கொண்டிருப்பதாக உள்ளது. பல குறை தீர்ப்பு நடைமுறைகள் பிரத்யேகமாக டிஜிட்டல் தளத்திற்கு மாறுகின்றன. இதில் பொது -தனியார் கூட்டு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படவில்லை என்பதை உறுதி படுத்த வேண்டும். ரயில் பயணிகளுக்கான வசதிகள் மேலும் உருவாக்கப்பட வேண்டும். சேவை தரம் மற்றும் குறை தீர்ப்பு சாதாரண பொது ஜனத்திற்கும் கிடைக்க வேண்டியதாக இருக்க வேண்டும் . அவர் டிஜிட்டல் முறையில் இயக்குவதற்கு அறிவு பெற்றவராகவோ அல்லது அவர் ஸ்மார்ட் போன் வைத்திருக்கவோ வாய்ப்பு இல்லை. சமூக ஊடகத்தில் தீவிரமாக உள்ளவர்களுக்கு பயன் அளிக்கும்வகையில் மட்டுமே பயன்படும் வகையில் இந்த திட்டங்கள் இருக்க கூடாது.

நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி புனித தலங்களில் உள்ள ரயில் நிலையங்களின் தரத்தை மேம்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருப்பதற்கு நான் அவரை பாராட்டுகிறேன். தமிழகத்தில் ஶ்ரீரங்கம் , ராமேஸ்வரம்  உள்ளிட்ட பல்வேறு புனித தலங்கள் உள்ளன. அங்குள்ள ரயில் நிலையங்களும் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். மும்பை, டெல்லி, மற்றும்  கொல்கத்தா புற நகர் பயண முறை தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும்  இந்த விஷயத்தில் சென்னை 2வத பெரிய புறநகர் பயண முறையாக மும்பையை அடுத்து உள்ளது. ஆனால் சென்னை  ரயில்நிலைய மேம்பாடு குறித்து இந்திய ரயில்வே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இது மிகப்பெரும் தவிர்த்தல் ஆகும்.

இந்த ரயில்வே பட்ஜெட்டில் சாதாரண மக்கள் தவிக்ககூடாது என ரயில் கட்டணங்கள் இந்த ஆண்டு உயர்த்தப்படவில்லை. இருப்பினும் பட்ஜெட்டில்சில இடர்பாடுகள் உள்ளன.ரயில்வே பட்ஜெட் மூலதனம் மற்றும் திட்ட நிர்வாக முறைகள் உரிய இடத்தில் வைக்கப்படுவதாக நான்  நம்புகிறேன். தற்போது தமிழகத்தில் பல ரயில்வே திட்டங்கள் செயல்பாட்டில்உள்ளன. இதில் விழுப்புரம்-கன்னியாகுமரி இடையே இரட்டை பாதை திட்டம் உள்ளது. இந்த திட்டம் விரைவாக முடிக்கப்படவேண்டும்.  இரண்டாவதாக தேசிய ரயில்வே திட்டம்  அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மாநில அரசுகளுடன் பல்தரப்பு முறையிலான ஒருங்கிணைப்புகள் மற்றும் ஆலோசனைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.,மாநில அரசுகளுடன் நியாயமான முறையில் ஆலோசனைகள் இருக்கும் என்று நம்புகிறேன்.

தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ரயில்வே பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.