தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்:முதல்வர் ஜெயலலிதா கருத்து

தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்:முதல்வர் ஜெயலலிதா கருத்து

செவ்வாய், மார்ச் 01,2016,

தமிழக மக்களின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பட்ஜெட்டில் வேளாண்மை, கிராமப்புற வருவாய் அதிகரிக்கும் என்பது வரவேற்கத்தது. அதிலும் விவசாயிகள் வருவாய் இரு மடங்காகும் என்பதை நிஜமாக்க வேண்டும்.

உணவு, உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு பணத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பதற்கு மானியத் தொகையில் சிக்கனம் செய்வதற்காக அல்ல! இந்தப் பொருள்கள் உரியவர்களுக்குக் கிடைப்பதுதான் முக்கியமாகும்.

பாசனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிரதம மந்திரியின் நீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியுதவிகளில் கவனம் செலுத்த வேண்டும். நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிதிகள் குறித்த காலத்தில் ஒதுக்கப்படாமல் இருக்கும் நிலையைப் போக்க வேண்டும்.

பிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்துக்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட திட்டங்களுக்கான மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

பின்பற்றப்படும் தமிழக அரசின் திட்டங்கள்: மண்வளத் திட்டம், மண் வள அட்டை ஆகிய திட்டங்கள் அதிமுக அரசின் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றுள்ளது. பிரதமரின் பயிர் காப்புறுதி திட்டம் வரவேற்கத்தக்க திட்டம் என்றாலும், அதற்கான நிதியுதவி போதுமானது அல்ல.

தேசிய கிராமப்புற டிஜிட்டல் கல்வி இயக்ககம் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதற்கு முன்னோடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விலையில்லாத மடிக்கணினி திட்டம் உள்ளது.

5 கோடி ஏழை குடும்பங்களுக்கு விலையில்லாத எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்பது தமிழகத்தில் உள்ள விலையில்லா மின்விசிறி, கிரைண்டர்கள், மிக்ஸிகள் வழங்கும் திட்டத்தின் நோக்கத்தைப் போன்றே உள்ளது. விலையில்லாத எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் யாரும் விடுபடாமல் தேர்வு செய்ய வேண்டும்.

பிரதம மந்திரியின் மருந்து விற்பனை திட்டத்தின் கீழ், 3 ஆயிரம் புதிய மருந்துக் கடைகள் திறக்கப்படும் என்பது தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்கள் திட்டம் போன்றே உள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரத் திட்டமும், முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போன்றுள்ளது. எனவே, மத்திய அரசின் புதிய திட்டத்தை, மாநில மருத்துவக் காபீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

மோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அதன் மூலம் சாலை போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்கும் திட்டம் கவலை அளிக்கிறது. இது, மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது.

மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளாத பல மத்திய அரசின் பிரிவுகளில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சேவை வரியில் வேளாண்மைக்கென உபரி (செஸ்) வரியும், வாகனங்களுக்கான கலால் வரியில் உட்கட்டமைப்புக்கென உபரி வரியும், நிலக்கரி மீதான வரியில் தூய்மையான சூழலுக்கு உபரி வரியும் விதிக்கப்படுவது என்பது பிற்போக்கான நடவடிக்கைகளாகும். இது, மாநில அரசுகளுடன் வரிகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காக மத்திய அரசு முயற்சிக்கும் வழிகளாகும்.

எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை: பட்ஜெட் மீது தமிழக மக்கள் மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். அவற்றை பூர்த்தி செய்திடும் வகையில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. இரு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் நிலைகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.