தமிழக மழை-வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்

தமிழக மழை-வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்தல்

வியாழன் , டிசம்பர் 03,2015,

புதுடெல்லி,

தமிழக வெள்ள சேதம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதை தேசிய பேரிடராக அறிவிக்குமாறு தமிழக அ.தி.மு.க. எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்றத்தில் நேற்று 193-வது விதியின்கீழ், தமிழக வெள்ள சேதம் குறித்த ஒத்திவைப்பு தீர்மான விவாதத்தை அ.தி.மு.க. உறுப்பினர் டி.ஜி.வெங்கடேஷ் பாபு தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ.8 ஆயிரத்து 480 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். உடனடியாக மத்தியப் படைகளை அனுப்பி வைத்ததற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தேசிய பேரிடர்:

அ.தி.மு.க. உறுப்பினர் எம்.சந்திரகாசி பேசுகையில், தமிழக வெள்ள சேதத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.முன்னதாக, மக்களவை துணைத் தலைவரும் கரூர் தொகுதி உறுப்பினருமான மு. தம்பிதுரை, “தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழு அறிக்கை அளிப்பதற்குள் மழை மீண்டும் கடுமையாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறையின் நடவடிக்கையை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவைக்கு வந்து விளக்க வேண்டும்’ என்றார்.

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சார்பில் பேசிய மத்திய திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி ராஜீவ் பிரதாப் ரூடி, ‘தமிழக வெள்ள சேதம் குறித்து மத்திய உள்துறை மந்திரி 3-ந் தேதி (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு சபையில் அறிக்கை தாக்கல் செய்வார்’ என்று கூறினார். அதை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார்.