தமிழக மாணவர்களின் நலன் கருதி சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

தமிழக மாணவர்களின் நலன் கருதி சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம்

திங்கள் , டிசம்பர் 14,2015,

மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக மாணவர்களின் நலன் கருதி சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தனிப்பட்ட முறையில் தாங்கள் நன்கு அறிவீர்கள். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பிற பகுதிகளிலும், சென்னையிலும் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. மின்சார சப்ளை உள்ளிட்ட பல்வேறு சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளது. தமிழக அரசு பல்வேறு பள்ளி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சிவில் சர்வீசஸ் தேர்வுகளை டிசம்பர் 18–ந்தேதி முதல் 23–ந்தேதி வரை நடத்த உள்ளதாக நான் அறிகிறேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் சென்னை மையத்தை பிரதான மையமாக கொண்டு விடுதிகள், வாடகை குடியிருப்புகளில் தங்கியிருந்து தேர்வு எழுதுவதற்கு தங்களை தயார்படுத்திவருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாக அவர்களுடைய இயல்பு வாழ்க்கை ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கள் படிப்புகளில் கவனம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் நெருக்கடியான சூழலில் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் நடைபெற்றால் தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் மற்ற பகுதிகளை சேர்ந்த மாணவர்களை விடவும் பின்னடைவையே சந்திக்க நேரிடும்.

கனமழை காரணமாக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தமிழக மாணவர்கள் தங்களை தேர்வு எழுதுவதற்கு தயார்படுத்திக் கொள்ளும் வகையிலும், பிற பகுதிகளை மாணவர்களுக்கு நிகராக தங்களை தயார் படுத்தி கொள்வதற்கு வசதியாகவும் சிவில் சர்வீசஸ் தேர்வினை குறைந்தது 2 மாதத்துக்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில்  தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.