தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

செவ்வாய், மார்ச் 08,2016,

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 64 மீனவர்களையும், 77 மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க நேரடியாக தலையிட வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை தங்களின் கவனத்துக்கு வேதனையோடு கொண்டு வர விரும்புகிறேன். 2 தனித்தனி சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 மீனவர்கள் 6.3.2016 அன்று (நேற்று முன்தினம் ) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடமிருந்து 4 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  முதல் சம்பவத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடி இயந்திர படகில் 9 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் 6.3.2016 அன்று அதிகாலையில் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்களை தலைமன்னாருக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இன்னொரு சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் கடலில் பாரம்பரிய யந்திர படகில் மீன் பிடிக்க சென்றனர்.  அவர்களையும் இலங்கை கடற்படையினர் 6.3.2016 அதிகாலை கைது செய்து, இலங்கையில் உள்ள கல்பிடியா என்னும் இடத்திற்கு  கொண்டு சென்றுள்ளனர். இதில் முக்கியமாகக் கருதவேண்டியது என்னவென்றால், பாக். நீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடிக்கான இடத்தில் மீன்பிடிப்பதையே தமிழக மீனவர்கள் பின்பற்றுகின்றனர். இந்தப் பகுதியில் உரிமை கோருவதையும், சர்வதேச கடல் எல்லை தொடர்பாகவும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது நிலுவையில் உள்ளது.

கச்சத்தீவு தொடர்பாக 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒப்பந்தம், அரசியல் சாசன ரீதியில் செல்லத்தக்கதல்ல என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் இணைந்துள்ளது. கைது செய்த மீனவர்களை விடுவித்தால்கூட, அவர்களின் மீன்பிடி படகுகளை விடாமல் வைத்துக் கொள்ளும் இலங்கை அரசின் நிலை பற்றி உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். இதனால் மீனவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு,  தமிழக மீனவர்களின் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

படகுகளை நீண்ட காலமாக நிறுத்தி வைத்திருப்பதாலும், அவற்றை பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, வடகிழக்கு பருவமழை காலங்களில் நிறுத்தி வைத்திருந்ததாலும், அவை கடுமையான சேதத்துக்கு உள்ளாகி இருக்கும். எனவே, இந்த ஏழை மீனவர்களின் படகுகளையும், உபகரணங்களையும் மீட்டு, நல்ல நிலைக்கு அவற்றை விரைவில் மத்திய அரசு சீர்செய்ய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதால், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்சினையில் சாதகமான முறையில் உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எனவே தற்போது கைது செய்யப்பட்ட நேற்று கைதான 29 மீனவர்களையும் சேர்த்து, இலங்கை சிறையில் உள்ள 64 தமிழக மீனவர்களையும், அவர்களின் 77 படகுகளையும் விடுவிப்பதற்காக, நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, இலங்கை அரசிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்லவேண்டும் என்று, வெளியுறவுத்துறைக்கு உத்தரவிடவேண்டும். இந்த பிரச்சினையில் தாங்கள், முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.