தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்

ஜூன் , 28 ,2017 , புதன்கிழமை,

சென்னை : தமிழக மீனவர்கள், படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க.(புரட்சி தலைவி அம்மா) பொருளாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டு கொண்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;–

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து செல்வது தொடர்கதையாகி வருகிறது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 மீனவர்களை தாக்கி, வலைகளை அறுத்தெறிந்து, படகுடன் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மீன்பிடி தடைகாலம் முடிந்து 10 நாட்களான நிலையில், இதுவரை 65 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதையும், தாக்கப்படுவதையும் கண்டித்து மத்திய அரசை பலமுறை வலியுறுத்தி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.

அவரது வழியில் நானும் முதல்–அமைச்சராக இருந்தபோது தமிழக மீனவர்கள் நலனை காத்திட மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். மத்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்தி இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற்கொண்டு, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும்.  இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.