தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடி உதவி:பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கு மேலும் ரூ.1,000 கோடி உடனடி உதவி:பிரதமர் மோடி அறிவிப்பு

வெள்ளி, டிசம்பர் 04,2015,

 

சென்னை,

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி-முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர். பின்னர்,பிரதமர் மோடியும், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் நேற்று சந்தித்து பேசிய போது, மழை வெள்ள சேதம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இந்தச் சந்திப்பு, கடற்கரை சாலையில் உள்ள சென்னை அடையாறு ஐ.என்.எஸ். விமான தள அலுவலகத்தில் நடந்தது.

ரூ.5,000 கோடி அளிக்க வலியுறுத்தல்

அப்போது  தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.

கவலை தெரிவித்த பிரதமர்:

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில்  ஏற்பட்ட கவலைத்தரத்தக்க நிலை குறித்து அவர் தனது கவலைகளைத் தெரிவித்தார். சென்னை நகரம் என்பது வளர்ச்சியின் மையமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.மேலும்,தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.1000 கோடியை உடனடியாக விடுவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

நிவாரண நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா,சென்னை வெள்ளப் பாதிப்பு உள்பட தமிழக வெள்ளச் சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரை கேட்டுக் கொண்டார்.