தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி; நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் வளர்மதி

தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி; நிவாரண உதவிகளை வழங்கினார் அமைச்சர் வளர்மதி

18 November 2015

 

                             கனமழையால் சேதமடைந்த 15 வீடுகளுக்கு அரசின் நிவாரண உதவிகளை  சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

                     இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக பேரிடர்களின் போது வழங்கப்படும் அரசின் நிவாரண உதவித் தொகைகளை உயர்த்தி வழங்கியதோடு மட்டுமல்லாமல், வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் சேதங்களுக்கு உடனடியாக அரசின் நிவாரண உதவிகளை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.

                 அதனைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் முழுமையாக மற்றும் பகுதியாக பாதிக்கப்பட்டுள்ள குடிசை வீடுகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்களால் திருத்திய நிவாரணத் தொகைகள்  உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகின்றன.

             சென்னை, எழும்பூர் வட்டத்திற்குட்பட்ட சேத்துப்பட்டு, புல்லாபுரம் மற்றும் நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் வட்டத்திற்குட்பட்ட ஒட்டேரி, தண்டையார்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர் வட்டத்திற்குட்பட்ட மந்தைவெளி மற்றும் வேளச்சேரி வட்டத்திற்குட்பட்ட ஆதம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையினால் சேதமடைந்த வீடுகளுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (18.11.2015) நடைபெற்றது.

                இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதி கலந்து கொண்டு, அரசின் நிவாரண உதவியாக முழுமையாக சேதமடைந்த ஒரு குடிசை வீட்டிற்கு ரூ.5,000/- ரொக்கம்,  பகுதியாக சேதமடைந்த 13 குடிசை வீடுகளுக்கு தலா ரூ.4,100/- ரொக்கம், பகுதியாக சேதமடைந்த ஒரு காண்கிரீட் வீட்டிற்கு ரூ.5,200/- ரொக்கம் ஆகியவற்றுடன்  ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை வழங்கினார். சென்னை மாவட்டத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழையினால் முழுமையாக சேதமடைந்த 8 குடிசை வீடுகள் மற்றும் பகுதியாக சேதமடைந்த 48 குடிசை வீடுகள் ஆக மொத்தம் 56 குடிசை வீடுகளுக்கு அரசின் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

            இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, மத்திய சென்னை  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.