தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி,காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து சித்த மருத்துவ பிரிவுகளிலும் நிலவேம்பு குடிநீர்-கலெக்டர் தகவல்

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி,காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து சித்த மருத்துவ பிரிவுகளிலும் நிலவேம்பு குடிநீர்-கலெக்டர் தகவல்

வியாழன்,நவம்பர்,26-2015

 

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அனைத்து அரசு சித்த மருத்துவ பிரிவுகளிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது என்று கலெக்டர்.கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

நிலவேம்பு குடிநீர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களை கட்டுப்படுத்த அரசு ஆஸ்பத்திரிகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களில் சித்த மருத்துவ பிரிவின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,061 இடங்களில் வரும் 29–ந் தேதி வரை நில வேம்பு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சித்த மருத்துவ பிரிவுகளில் நில வேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 9 வகையான மூலிகை கலந்த நிலவேம்பு குடிநீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் வராமல் தடுக்கிறது.

5 நாட்களுக்கு பெரியவர்கள் 30 மி.லி முதல் 50 மி.லி வரையும் 1 முதல் 12 வயது வரை உள்ளவர்கள் 10 மி.லி வரையும் தொடர்ந்து 5 நாட்களுக்கு அருந்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நிலவேம்பு குடிநீரை பருகி காய்ச்சல் மற்றும் தொற்று நோய்களில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.