தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு மீதான இடைக்கால தடையை நீக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல்

வியாழன் , மார்ச் 10,2016,

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த 2014–ம் ஆண்டு மே மாதம் 7–ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதேபோல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், ஜல்லிக்கட்டு பேரவை, வீர விளையாட்டு கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தீவிர முயற்சி எடுத்தனர்.

பல தரப்பிலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து மத்திய அரசு ஜனவரி 7–ந் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதனால் மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு முழுவீச்சில் ஏற்பாடுகள் நடந்தன.

இந்த நிலையில், மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனிநபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அனுமதி அளித்து ஜனவரி 7–ந் தேதி பிறப்பித்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் மத்திய அரசு, தமிழக அரசு, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட தொடர்புடைய மாநில அரசுகள் 4 வார காலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவில்லை.

இந்த வழக்கின் மீதான விசாரணை வருகிற 15–ந் தேதி நடைபெற இருக்கும் நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரியமான கலாசார விளையாட்டு. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கும், மற்ற போட்டிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இந்த போட்டிகளின் போது காளைகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவது இல்லை. ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் மிகவும் அக்கறையுடன் அதிக செலவில் பராமரிக்கப்படுகின்றன.

ஜல்லிக்கட்டு விளையாட்டில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று கூறுவது ஏற்புடையது அல்ல. தமிழகத்தின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் முக்கியத்துவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டே மத்திய அரசு, காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை சரியானதே. அது ஒரு மாநிலத்தின் பெரும்பாலான மக்களின் கருத்தை கவனத்தில் கொண்டு வெளியிடப்பட்டதாகும். எனவே, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.