தமிழர்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா:அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

தமிழர்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர் முதலமைச்சர்  ஜெயலலிதா:அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

புதன்கிழமை, ஜனவரி 27, 2016,

தமிழ்மொழி, தமிழர்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

அ.தி.மு.க. வேலூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் சத்துவாச்சாரியில் நேற்று நடந்தது. மாவட்ட மாணவரணி செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தொகுதி கழக செயலாளர் சி.கே.சிவாஜி, சத்துவாச்சாரி கிழக்கு பகுதி செயலாளர் சுந்தரம், மாணவரணி இணைசெயலாளர்கள் ராஜேந்திரன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமசந்திரன், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் பிரபாகர் ஆகியோர் பேசினர்.

இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

‘தமிழன் என்று சொல்லடா’, ‘தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற அண்ணாவின் வார்த்தைகளுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் இந்திமொழி திணிப்பை எதிர்த்து உயிர்நீர்த்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள் இன்றாகும். பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் மீட்டெடுக்கப்பட்ட மொழி நமது தமிழ்மொழி.

தமிழ், தமிழன் என்று சொல்லி தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்தும் தலைவர்கள் மத்தியில் தமிழ், தமிழ்நாடு, தமிழர்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தலைவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா. தமிழ்மொழியை நவீனப்படுத்த, மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சுயநலத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது.

தமிழை உலக மொழியாக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா பாடுபட்டு வருகிறார். தமிழ்மொழியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளார். சீனா, கொரிய உள்பட பல்வேறு நாடுகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மதுரையில் ரூ.40 கோடி செலவில் நவீன மயமாக்கப்பட்ட உலக தமிழ் சின்னத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கட்டி வருகிறார். சென்னை தரமணியில் ரூ.15 கோடி மதிப்பில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கட்டப்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் 44 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள், தங்கப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா வரிசையில் தமிழ்மொழியை முதல்–அமைச்சர் ஜெயலலிதா பாதுகாத்து வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.