தமிழுக்கு அடையாளம் திருக்குறள்.தமிழ்நாட்டுக்கு அடையாளம் முதல்வர் ஜெயலலிதா:தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் மூ.ராஜாராம் பேச்சு

தமிழுக்கு அடையாளம் திருக்குறள்.தமிழ்நாட்டுக்கு அடையாளம் முதல்வர் ஜெயலலிதா:தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் மூ.ராஜாராம் பேச்சு

ஞாயிறு, ஜனவரி 17,2016,

தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2015-ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விருது வழங்கும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிதி-பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விருதுகளை வழங்கிப் பேசினார்.

திருவள்ளுவர் விருது-முனைவர் வி.ஜி.சந்தோசம், தந்தை பெரியார் விருது-தருமபுரி வி.ஆர்.வேங்கன், அண்ணல் அம்பேத்கர் விருது-முன்னாள் அமைச்சர் எ.பொன்னுசாமி, பேரறிஞர் அண்ணா விருது-பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா பாப்பா-காரைக்குடி, பெருந்தலைவர் காமராசர் விருது-பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் இரா.வேங்கடசாமி, காந்தி நிகேதன், தே.கல்லுப்பட்டி, மகாகவி பாரதியார் விருது-கவிஞர் பொன்னடியான், பாவேந்தர் பாரதிதாசன் விருது-முனைவர் வீ.ரேணுகாதேவி, மதுரை, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது- கி. வைத்தியநாதன், தினமணி ஆசிரியர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- இரா.கோ.ராசாராம் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான சான்றிதழை வழங்கி, ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வாக்களித்த மக்களின் நம்பிக்கையினை ஈடேற்றி, நிர்வாகத்தை சீர்படுத்தி, நேர்படுத்தி, திறம்பட மேம்படுத்தி, உரிமைக்குரல் எழுப்பி, உற்சாகப் பணியாற்றி, ஆக்கப்பூர்வ சிந்தனையால், அறிவார்ந்த செயல்களால், முன்னோடித் திட்டங்களால், தமிழையும், தமிழ்நாட்டையும் கட்டிக்காத்து மேம்படுத்தி, தமிழர் வாழ்வு நலம் பெறவே, ஜெயலலிதா ஓய்வறியாது உழைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டின் காரணமாக தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய அரும் பணியின் காரணமாக தமிழ்நாடு அரசின் விருதுகளை பெறுகின்ற அனைவருக்கும் முதல்-அமைச்சர் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

அனைவரையும் வரவேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.ராஜாராம் பேசியதாவது:-

திருக்குறள் பல்வேறு பெருமைகளை உள்ளடக்கியது. இன்றைக்கு அதிகமான மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. தமிழுக்கு அடையாளம் திருக்குறள். தமிழ்நாட்டுக்கு அடையாளம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபட்டு வருகிறார். அதிகமான நிதிகளை ஒதுக்கி தமிழை உலக அரங்கில் பரப்பி வருகிறார்.இவ்வாறு மூ.ராஜாராம் பேசினார்.

விருது பெற்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பேசும்போது, ‘திரு.வி.க. விருது பெற்றது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. திரு.வி.க. பெயரில் பெற்றது ஒன்று, மற்றொன்று எனது குரு சாவிக்கு அவர் குரு. அந்த வகையில் அவர் குரு முதல்வர். இந்த விருது என்னுடன் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கும், எழுத்தர்களுக்கும் கிடைத்த விருதாகவே கருதுகிறேன். அவர்களின் முகமாகவே இந்த விருதை பெற்றுள்ளேன்’ என்றார்.

தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் பேசும்போது, ‘எனக்கு விருது அளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தமிழ் பணி தொடர வேண்டும். தமிழறிஞர்களுக்கு தொடர்ந்து விருதுகள் வழங்க வேண்டும்’ என்றார்.