தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்:மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்:மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

புதன், டிசம்பர் 09,2015,

தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு, பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை, தேசிய பேரிடராக, உடனடியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக, பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத சேதங்கள் மற்றும் பேரழிவுகள் குறித்து பிரதமர் அறிவார் என குறிப்பிட்டுள்ளார்.

கனமழை வெள்ளத்தினால் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களின் உடமைகளுக்கும் பெருமளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன – பாதிக்கப்பட்ட குடிசைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன – கடந்த 23-ம் தேதி இதுதொடர்பாக பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவுடன் மேலும் ஒரு கூடுதல் மனுவை விரைவில் அளிக்கவுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர், தங்கள் வீடுகள், உடமைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு காப்பீடு பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பாக விரைவில் கணக்கெடுப்பு நடத்தி, காப்பீடுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் – ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் இத்தகைய காப்பீட்டுத் தொகைகளை அளிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் – குறிப்பாக, வங்கிகளில் வாங்கிய கடன் தொகையை திருப்பி வசூல் செய்வதை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் – கடன் தொகையை மாற்றியமைப்பதன் மூலம் மாதாந்திரம் செலுத்த வேண்டிய தவணைத் தொகைகளை எளிதாக்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறப்பு நிகழ்வாக, வங்கிகள் தாராளமாக கடனுதவி அளிக்கவும், கல்விக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – இதன் மூலம் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு பெறமுடியும் – கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் சமையல் உபகரணங்கள் வாங்குவோருக்கு, கலால் வரியிலிருந்து, அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரை விலக்கு அளிக்கவேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு, பெருமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை, தேசிய பேரிடராக, உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.