தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து

தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட கிரிஜா வைத்தியநாதன் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து

வெள்ளி, டிசம்பர் 23,2016,

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றுக் கொண்டார்.பின்னர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து, கிரிஜா வைத்தியநாதன் வாழ்த்துப் பெற்றார்.

தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் வீடு, அலுவலகம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதைத்தொடர்ந்து ராமமோகன ராவ், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
எனவே, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான அரசு உத்தரவு 22-ந் தேதி பிறப்பிக்கப்பட்டது.
நேர்மை, உழைப்பு, கோப்புகளில் உடனடி முடிவெடுக்கும் ஆற்றல், எல்லோரிடமும் அன்பாக பழகுதல், ஏழை-எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள் நலனில் விசேஷ அக்கறை என பன்முக திறமை கொண்ட கிரிஜா வைத்தியநாதன் அலுவலகத்தில் கோப்புகள் தேங்குவதேயில்லை.
கிரிஜா வைத்தியநாதன் இன்று காலையில் தலைமைச் செயலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார். காலை 9.10 மணிக்கு தலைமைச் செயலகத்துக்கு வந்த அவர், பிரதான கட்டிடத்தின் 2-வது மாடியில் உள்ள தலைமைச் செயலாளர் அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு அவருக்கு நேர்முக உதவியாளர்கள் சில ஆவணங்களைக் கொடுத்தனர். அதில் கையெழுத்திட்டு காலை 9.15 மணிக்கு தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறைக்குச்சென்று அவரை சந்தித்து வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பின்னர் தனது அலுவலகத்துக்கு கிரிஜா வைத்தியநாதன் வந்தார்.
அங்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் பூங்கொத்துடன் வந்து வாழ்த்தினார்கள். வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த கிரிஜா வைத்தியநாதன், பூங்கொத்துகளை வாங்க மறுத்துவிட்டார்.அதைத்தொடர்ந்து நடந்த அரசு நிகழ்வுகளில் கிரிஜா வைத்தியநாதன் கலந்துகொண்டார். தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினரும் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.