தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகை, 1,550 கோடி ரூபாயை, உடனடியாக வழங்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகை, 1,550 கோடி ரூபாயை, உடனடியாக வழங்க வேண்டும்’ என, பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

வெள்ளி, டிசம்பர் 18,2015,

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் உயர்கல்விக்கான, தமிழகத்துக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.1,550 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமருக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;-

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்வுக்கு பின், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், உயர்கல்வி படிக்க, மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது; இத்திட்டத்திற்காக, தமிழக அரசு, 1,295 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. இதில், மத்திய அரசின் பங்கு, 942 கோடி ரூபாய்; 2014ல் மத்திய அரசு பங்கு, 1,175 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.

இதுவரை மத்திய அரசு, 567 கோடி ரூபாய் மட்டுமே வழங்கி உள்ளது. எனவே, மொத்த நிலுவைத் தொகை, 1,549 கோடி ரூபாயை உடனே வழங்க வேண்டும் என, மத்திய சமூக நீதி அமைச்சகத் திற்கு கோரிக்கை விடப்பட்டது.ஆனால், ‘பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படாததால், தமிழகத்திற்கு வழங்க இயலவில்லை’ என்று  தமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச்சேர்ந்தவர்கள்- அவர்களுக்கு ஊக்கமளித்து, உயர்கல்வியை தொடர வழி செய்ய வேண்டுமானால், குறித்த காலத்தில் கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் என்பதை பிரதமர் ஏற்றுக் கொள்வார் என்று நம்புவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இந்த உதவித்தொகை வழங்குவதை தாமதப்படுத்தினால், திட்டத்தின் நல்ல நோக்கமே அடிபட்டுப் போய்விடும்.

நலிவடைந்த பிரிவினர் கல்வியின் மூலமாக வாழ்க்கையில் முன்னேற்றமடைய இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானதாகும். இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் இன்றியமையாத் தன்மையை கருத்தில் கொண்டு சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறைக்கு தமிழ்நாட்டுக்கு நிலுவையில் உள்ள, 2014 -2015-ம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய எஞ்சிய தொகை 607 கோடியே 76 லட்சம் ரூபாய் மற்றும் 2015 -2016-ம் ஆண்டுக்கு அளிக்கப்பட வேண்டிய 942 கோடி ரூபாய் ஆகிய தொகை உள்ளிட்ட மொத்தம் 1549கோடியே 76 லட்சம் ரூபாய் மத்திய அரசின் பங்குத் தொகை முழுவதையும் வழங்க வசதியாக மத்திய நிதியமைச்சகம் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.