திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில்,ஆம்வே இந்தியா நிறுவன தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில்,ஆம்வே இந்தியா நிறுவன தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

திங்கள் , டிசம்பர் 28,2015,

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆம்வே இந்தியா நிறுவன தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார்.
புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் அமெரிக்காவின் மிகப்பெரிய 25 தனியார் நிறுவனங்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்ட ஆம்வே நிறுவனமானது 55 ஆண்டு கால பாரம்பரிய நிறுவனமாகும் – இந்நிறுவனம் ஊட்டச்சத்து, அழகு சாதனப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது.
350 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் ஆம்வே நிறுவன தொழிற்சாலையை நிறுவிட கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது – தமிழகத்தில் நிலவும் முதலீட்டுக்கு உகந்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டு, ஆம்வே நிறுவனம் தனது முதலீட்டினை 550 கோடி ரூபாயாக உயர்த்தி, சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அதன் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் – நிலக்கோட்டை சிப்காட் தொழில் வளாகத்தில், 50 ஏக்கர் நிலப் பரப்பளவில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள ஆம்வே இந்தியா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத் தொழிற்சாலையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இத்தொழிற்சாலை, இந்தியாவில் ஆம்வே நிறுவனம் நிறுவிய முதல் தொழிற்சாலையாகும் என்பது குறிப்பிடத்தக்கது – இத்தொழிற்சாலை மூலமாக சுமார் 500 நபர்கள் நேரடி வேலைவாய்ப்பும், சுமார் 1000 நபர்கள் மறைமுக வேலைவாய்ப்பும் பெறுவார்கள். மேலும், இந்நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் 5 லட்சத்து 50 ஆயிரம் ஆம்வேயின் நேரடி முனைப்பான வர்த்தக உரிமையாளர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில், ஆம்வே இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.அன்ஷு புத்ராஜா பேசும்போது,முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், “Amway plant is most impressive. I wish you great success.” என்று பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு நத்தம் ஆர். விசுவநாதன், தொழில் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.P. தங்கமணி, தலைமைச் செயலாளர் திரு. கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.சி.வி. சங்கர், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆர். செல்வராஜ், ஆம்வே இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு.அன்ஷு புத்ராஜா, தெற்கு பிரிவு துணைத் தலைவர் திரு.சுஜாய் போஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.