திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்

ஞாயிறு, மே 08,2016,

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: சென்னை பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி முன்னிலையில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சியமைந்தால் ஜனநாயக ஆட்சியாக இருக்கும் எனக் கூறியுள்ளார். திமுக, காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை. வாரிசு அடிப்படையிலான குடும்ப ஆதிக்கமே மேலோங்கியுள்ளன. ஆகவே, ஜனநாயகத்துக்கு எதிரான வாரிசு அரசியலுக்கு மக்கள் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வாக்களிப்பது நல்லது.

தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது, தனி ஈழத்துக்கு ஆதரவு என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

சந்தர்ப்பவாதத்தில் அமைக்கப்பட்ட கூட்டணிகள் தேர்தலுக்கு பிறகு நீடிக்குமா என்பது சந்தேகம். தமிழர் உரிமை, தமிழர் நலன் எனப் பேசிய திமுக ஆட்சியில் ஆங்கிலப் பள்ளிகளுக்கே முக்கியத்துவம் அளித்தனர். நீதிமன்ற மொழியாக தமிழை அறிவிக்கக்கூட நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, திமுக தமிழை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறது.

திருவாரூர் மக்களுக்காக கடந்த ஐந்தாண்டுகளாக சட்டசபைக்குச் சென்று அவர்களது பிரச்னையைப் பேசாத கருணாநிதி மீண்டும் அம் மக்களிடம் வாக்குக் கேட்பது எந்த வகையில் நியாயம்?.

சட்டப்பேரவைத் தேர்தலில் ஈழத்தமிழர் பிரச்னையானது நிச்சயம் எதிரொலிக்கும். அப் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்காத கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என கூறும் மக்கள் நலக் கூட்டணியானது கொள்கை அளவில் அமையவில்லை. பதவி அடிப்படையில் அமைந்த அக் கூட்டணியானது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக முடியாது. மேலை நாடுகளைப் போல தேர்தல் ஆணையத்துக்கு முழுமையான அதிகாரம் அளித்தால் தவறுகளைத் தடுக்க முடியும் என்றார்.

பேட்டியின்போது அக் கட்சியின் மாநில பொதுச்செயலர் கா.பரந்தாமன், துணைத் தலைவர் அய்யநாதன், மாநகர் மாவட்டத் தலைவர் வெ.ந.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.