திமுகவில் உட்கட்சி பூசல் : பதவிக்காக மோதல் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து

திமுகவில் உட்கட்சி பூசல் : பதவிக்காக மோதல் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து

வெள்ளி, ஜனவரி 29,2016,

உட்கட்சிப் பூசல்களுக்கு விதிவிலக்காக எந்த அரசியல் கட்சியும் இருந்ததில்லை. அந்த வகையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளில் ஒன்றான திமுகவிலும் உட்கட்சிப் பூசல்கள் எழுந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் வாரிசுகளுக்கு இடையிலான பிரச்னைகள் தொடங்கி, மாவட்டச் செயலாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் வரை பல்வேறு நேரங்களில் உட்கட்சிப் பூசல்கள் தலை தூக்கியுள்ளன. குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவை அதிகரிப்பதை காண முடிகிறது.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக வேட்பாளர்கள் தேர்வில் கட்சியின் நீண்டகால தொண்டர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதால் உட்கட்சிப் பூசலை தவிர்க்க மாவட்டச் செயலாளர்களுக்கு வேறு மாவட்டங்களில் தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தை திமுகவினர் சிலர் முற்றுகையிட்டனர். இதற்கு காரணம் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா தான் என்று கூறி அவரது படங்கள் கிழித்தெறியப்பட்டன.
திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு ஆதரவாக சென்னையில் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதற்கும் அரசியல் பின்னணி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து நெல்லையில் சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது திமுக பொருளாளர் ஸ்டாலின் பிரிவினருக்கும் கனிமொழி பிரிவினருக்குமான மோதல் என்ற பேசப்பட்டு வந்தாலும் அதனை கனிமொழி மறுத்துள்ளார்.

கட்சிக்குள் மாற்று கருத்துகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது அவசியம் என்றாலும் இப்போது ஏற்படும் உட்கட்சிப் பூசல்கள் கொள்கைகள், கருத்துகள் அடிப்படையில் இல்லாமல் பதவிக்காகவும் அதிகாரத்துக்காகவும் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.