கலால் வரி உயர்வுக்கு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்:மக்கள் நலன் கருதி விற்பனை வரியை உயர்த்தவில்லை என்றும் அறிவிப்பு

கலால் வரி உயர்வுக்கு மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம்:மக்கள் நலன் கருதி விற்பனை வரியை உயர்த்தவில்லை என்றும் அறிவிப்பு

ஞாயிறு, ஜனவரி 31,2016,

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். கலால் வரி உயர்வையடுத்து பல மாநிலங்கள் விற்பனை வரியை உயர்த்தியபோதிலும், மக்கள் நலன் கருதி தமிழக அரசு பெட்ரோல், டீசல் விற்பனை வரியை உயர்த்தவில்லை என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்த தவறான பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயக் கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும் என பல முறை தெரிவித்துள்ளதாகவும், அதைச் செய்வதன் மூலமும், கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் மீது 11 ரூபாய் 77 காசுகள் அளவிற்கும், டீசல் மீது 13 ரூபாய் 57 காசுகள் அளவிற்கும் உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைப்பதன் மூலமும் மிக குறைந்த விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு கிடைக்க ஏதுவாகும் என்று ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசைப் பின்பற்றி பல மாநிலங்கள் தங்களால் விதிக்கப்படும் விற்பனை வரியை உயர்த்தியுள்ள போதிலும், தமிழக மக்களின் நலன் மீது எப்போதும் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை என்றும், எனவே தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விற்பனை வரி தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் குறைவாக உள்ளதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு உயர்த்தப்பட்ட கலால் வரியை குறைப்பதன் மூலம் இவை மிகக் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை ஏற்படும் என்றும், அதன் மூலம் பொருளாதாரம் மலர்ச்சி அடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய அரசின் வருவாய் பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தை விடுத்து, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி என்ற நீண்ட கால கண்ணோட்டத்தின் அடிப்படையில் இந்த கலால் வரி உயர்வுகளை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.