திருப்பரங்குன்றத்தில், ஏ.கே.போசை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு

திருப்பரங்குன்றத்தில், ஏ.கே.போசை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் வாக்கு சேகரிப்பு

சனி, நவம்பர் 05,2016,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசை ஆதரித்து அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மதுரை மாநகராட்சி 96வது வார்டு திருப்பரங்குன்றம் பகுதியில் வீதிவீதியாக திறந்த ஜீப்பில் சென்று வாக்குகளை சேகரித்தனர்.தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து 100 சதவீதம் நிறைவேற்றும் ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தின் போது கூறினார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போசை ஆதரித்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்ற இடங்களில் எல்லாம் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே என்று மகிழ்ச்சியுடன் கூறி வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாநகராட்சி 96வது வார்டு திருப்பரங்குன்றம் பகுதியில் இன்று காலை வீதி வீதியாக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் திறந்த ஜீப்பில் சென்று வாக்குகளை சேகரித்தனர்.
96வது வார்டில் உள்ள ஓம்சக்தி நகர், பழனியாண்டவர் கோவில் வீதி, திருமுலையூர், கீழரத வீதி, ராஜீவ்காந்தி நகர், பாம்பன் நகர் ஆகிய பகுதிகளில் வீதிவீதியாக சென்று அமைச்சர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் சாதனை திட்டங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தனர். அப்போது ஏராளமான பெண்கள் கழக வேட்பாளர் ஏ.கே.போசை ஆரத்தி எடுத்து வரவேற்று முதல்வர் அம்மாவால் நாங்கள் பயன்பெற்று வளம் அடைந்துள்ளோம். எங்கள் வாக்கு இரட்டை இலைக்கே என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:–

முதல்வர் ஜெயலலிதாவின் ஆசிபெற்ற கழக வேட்பாளர் ஏ.கே.போஸ் வாக்குகேட்டு செல்லும் இடங்கள் எல்லாம் மக்களாகிய நீங்கள் வரவேற்று எங்கள் ஓட்டு என்றைக்கும் முதல்வருக்கு என்று கூறும்போது, திருப்பரங்குன்றம் என்றைக்குமே முதல்வரின் எஃகு கோட்டையாக திகழ்கிறது.முதல்வர் ஜெயலலிதாவின் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டுமக்களுக்கு செய்த நலதிட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.தமிழத்தில் அனைத்து துறைகளும் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பான நிர்வாகத்தால் முதன்மை இடத்தல் திகழ்ந்து வருகின்றன. முதல்வர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களும் கடைகோடி மக்களுக்கும் நேரடியாக கிடைத்து வருகின்றன. தமிழக மக்கள் செய்த புண்ணியம் தான் தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா கிடைத்துள்ளார்.
மக்களுக்காக பாடுபட்டு வரும் ஜெயலலிதா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் மக்கள் செய்த பிரார்த்தனையின் காரணமாக இன்றைக்கு பூரண உடல் நலம் பெற்று ஒரு சில தினங்களில் இல்லம் திரும்ப இருக்கிறார்.

தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான முல்லை பெரியாறு, காவிரி போன்றவற்றில் தி.மு.க. தன் சுயநலத்திற்காக பெற்று தரமால் தமிழகத்திற்கு மாபெரும் துரோகத்தை செய்தனர். ஆனால் முதல்வர் ஜெயலலிதா காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்பை மத்திய அரசு இதழில் வெளியிட செய்து காவிரி நீரை பெற்று தந்தார்.முல்லைபெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142அடியாக உயர்த்தி இதன் மூலம் 2 லட்சத்து 30ஏக்கர் நிலங்களில் பாசன வசதியை பெற்று தந்ததுமட்டுமல்லாது 5 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனையை முதல்வர் ஜெயலலிதா போக்கியுள்ளார். மேலும் சிறுவாணி அணையின் மூலம் கோயம்புத்தூர் மக்களின் தாகத்தை முதல்வர் ஜெயலலிதா போக்கியுள்ளார்.
இலங்கை தமிழர்களின் இன்னல் போக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார். மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் 14வகை கல்வி உபகரணங்களை வழங்கி தரமான கல்வியை கொடுத்து மாபெரும் சாதனை படைத்து கல்வி தாயாக முதல்வர் ஜெயலலிதா உள்ளார். தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களுக்கு மாதம்தோறும் விலையில்லா 20 கிலோ அரிசி வழங்கி வருகிறார். இந்திய தேசத்தில் மட்டுமல்லாது உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் மக்களுக்காக 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறார். இதன் மூலம் 1 கோடியே 91லட்சம் குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதை 100 சதவீதம் தந்திடும் ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா. மக்களுக்காக தியாக வாழ்வை மேற்கொண்டு நல் ஆட்சி நடத்திவரும் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற வெற்றி வேட்பாளர் ஏ.கே.போசுக்கு வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு வாக்கு அளித்து 1லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைய செய்து தருமாறு வாக்காளர் பெருமக்களாகிய உங்களை கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.