தி.மு.க.வில் கோஷ்டி மோதல்; நேரு அலுவலகம் முன்பு முற்றுகை; சிவா எம்.பி. விளம்பர சுவரொட்டி கிழிப்பு

தி.மு.க.வில் கோஷ்டி மோதல்; நேரு அலுவலகம் முன்பு முற்றுகை; சிவா எம்.பி. விளம்பர சுவரொட்டி கிழிப்பு

திருச்சி; தி.மு.க.வில் ‘திடீர்’ கோஷ்டி மோதலையடுத்து, நேரு அலுவலகம் முன்பு முற்றுகை நடந்தது. சிவா எம்.பி. விளம்பர பதாகை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு அலுவலகம் தில்லைநகரில் கோட்டை ரெயில்வே நிலையம் சாலையில் உள்ளது. நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெளியில் செல்லாத நேரங்களில் அலுவலகத்திலேயே நேரு தங்கி இருப்பார். ஓய்வெடுப்பதும் அங்கும் தான். இதற்காக அறைகள் தனியாக உள்ளன.

இந்த நிலையில் திருச்சி உறையூரில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்திற்கான துண்டுபிரசுரங்கள், சுவரொட்டிகளில் சிவா எம்.பி. யின் புகைப்படம் மற்றும் பெயர் இல்லை என்று கூறி சிவா எம்.பி.யின் ஆதரவாளர்களும், தி.மு.க. மாணவர் அணியை சேர்ந்த சிலரும் கையில் தி.மு.க. கொடியுடன் வந்து நேற்று மதியம் நேரு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தலைமை செயற்குழு உறுப்பினராகவும் உள்ள திருச்சி சிவா எம்.பி. யின் பெயர், புகைப்படங்கள் கட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், அவரையும் புறக்கணிப்பதாகவும் கூறி கோஷமிட்டனர்.

அப்போது அலுவலகத்தில் நேரு ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் நேரு வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினார். சிவா எம்.பி.யின் புகைப்படம், பெயரை கட்சி நிகழ்ச்சி சுவரொட்டிகளில் அச்சடிக்க சொல்கிறேன் என்று நேரு கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் தெற்கு மாவட்ட செயலாளர் நேருவின் அலுவலகத்தை சிவா எம்.பி. ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது குறித்து தகவல் அறிந்த நேருவின் ஆதரவாளர்கள் திரண்டு வந்து அலுவலகம் முன்பு குவிந்தனர். இதில் ஒரு சிலர் வாகனங்களில் புறப்பட்டு திருச்சி கண்டோன்மெண்ட்டில் ராஜா காலனியில் உள்ள சிவா எம்.பி.யின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த சிவா எம்.பி.யின் விளம்பர பதாகைகளை (பேனர்) கிழித்து எறிந்தனர்.

மேலும் கனிமொழி எம்.பி. பிறந்த நாளையொட்டி சிவா எம்.பி.யின் மகன் சூர்யா மற்றும் நிர்வாகிகள் வாழ்த்தி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்தனர். பின்னர் சிவா எம்.பி.யின் வீட்டை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதற்கிடையில் விமானநிலையம் அருகே செம்பட்டு பகுதியில் சிவா எம்.பி.யின் மகன் சூர்யாவின் காகித அட்டைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தை நேருவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். அலுவலகத்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். கண்ணாடியை கையால் ஒருவர் உடைத்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது.திருச்சி தி.மு.க.வில் திடீர் கோஷ்டி மோதல் கட்சி நிர்வாகிகளிடையேயும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.