தீபாவளித் திருநாளையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – முன் பதிவு மையங்களில் உடனுக்குடன் பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு

தீபாவளித் திருநாளையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாளை முதல் தமிழகம் முழுவதும் சுமார் 12 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – முன் பதிவு மையங்களில் உடனுக்குடன் பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு

தீபாவளி திருநாளை தமிழக மக்கள், தங்கள் சொந்த ஊரில் கொண்டாட ஏதுவாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, நாளை முதல் 9-ம் தேதி வரை, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், தமிழகம் முழுவதும் 11 ஆயிரத்து 959 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளிக்குப் பின்னர், பொதுமக்கள் திரும்பிச் செல்ல, இதே அளவு பேருந்துகள், வரும் 10-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

தமிழக மக்கள், தீப ஒளித் திருநாளாம் தீபாவளித் திருநாளை தங்கள் சொந்த மண்ணில் கொண்டாடுவதற்கு ஏதுவாக, கடந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகின்றன. அதே போன்று, இந்த ஆண்டும் தீபாவளித் திருநாளையொட்டி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு, நாளை ஆயிரத்து 106 சிறப்புப் பேருந்துகளும், நாளை மறுநாள் ஆயிரத்து 146 சிறப்புப் பேருந்துகளும், வரும் 8-ம் தேதி 825 சிறப்புப் பேருந்துகளும், 9-ம் தேதி ஆயிரத்து 194 சிறப்புப் பேருந்துகளும் என நாளை முதல் 9-ம் தேதி வரை, மொத்தம் 4 ஆயிரத்து 271 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர, மாநிலத்தின் முக்கிய ஊர்களிலிருந்து, நாளை ஆயிரத்து 554 சிறப்புப் பேருந்துகளும், நாளை மறுநாள் ஆயிரத்து 717 சிறப்புப் பேருந்துகளும், வரும் 8-ம் தேதியன்று ஆயிரத்து 822 சிறப்புப் பேருந்துகளும், 9-ம் தேதியன்று 2 ஆயிரத்து 595 சிறப்புப் பேருந்துகளும் என நாளை முதல் 9-ம் தேதி வரை 7 ஆயிரத்து 688 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளித் திருநாளையொட்டி நாளை முதல் 9-ம் தேதி வரை, மொத்தமாக 11 ஆயிரத்து 959 சிறப்புப் பேருந்துகள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி இயக்கப்பட உள்ளன.

இதேபோன்று, தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்பு, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம், இதே அளவிலான பேருந்துகள் 10-தேதி முதல் 16-ம் தேதி வரை இயக்கப்படும் – தீபாவளியையொட்டி, சென்னை மாநகரில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கணிசமான அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது போல், 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்புப் பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம் – கணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 25 சிறப்பு முன் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், அதுகுறித்து சென்னை, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக அலுவலக தொலைபேசி எண் 044-24794709-க்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், பெறப்படும் புகார்களின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.